சின்னம்மாவை நாய்னு சொல்ற எடப்பாடி பழனிச்சாமி, பகிரங்க மன்னிப்பு கேள்.. பொங்கி எழுந்த பெங்களூர் புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 12:12 PM IST
Highlights

அண்ணன் ஓபிஎஸ்சை பார்த்து நான் கேட்கிறேன், தமிழக மக்கள் குறிப்பாக தென் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் எடப்பாடியின் பேச்சை மன்னிப்பார்களா? எடப்பாடி நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார், இன்னுமா நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். 

ஒரு பெண் என்றும் பாராமல் ஒரு  கட்சியின் தலைவி என்றும் பாராமல் சசிகலா அம்மையாரை இழிவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் என்றும் பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் கல்வெட்டை திறந்து வைத்த சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடி ஏற்றினார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பின்னர் இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அதை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்தார், மேலும் பேசிய அவர், சூரியனைப் பார்த்து... அதை நான்  ஓபனாக சொல்ல முடியாது எனக் கூறினார் (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் பாதிப்பு நாய்க்குதான் என்ற அர்த்தத்தில்).  எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இப்பேச்சை பலரும் கண்டித்து வருகின்றனர், இந்நிலையில்  அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு வா.புகழேந்தி எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சை கண்டித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பது பின்வருமாறு:- 

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆளுநரை சந்தித்து தமிழக அரசு குறித்து மனு அளித்தார்கள், ஏற்கனவே அதிமுக பொன்விழா கண்டுள்ள இந்த நேரத்தில் அம்மாவின் நினைவிடத்துக்கு சென்று அதிமுக பெற்ற தொடர் தோல்விகளை சமர்பித்து இருக்கிறார் அவர், இப்போது புதிதாக வந்துள்ள ஆளுநருக்கும் அதிமுக 90% அளவுக்கு தோற்றுப் போனதையெல்லாம் சொல்லி விட்டு வந்திருக்கிறார்கள், அதெல்லாம் போகட்டும், ஆனால்  திருமதி வி.கே சசிகலா என்கிற சின்னம்மா குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரைப் பற்றி பேச விருப்பம் இல்லையென்றால் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் சூரியனைப் பார்த்து... அத விட்ருங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்று  கூறியுள்ளார்.  அப்படி என்றால் சின்னம்மாவை நாய் என்று சொல்கிறாயா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ள புகழேந்தி, நாய் நன்றியுள்ளது. நாயைப்போல நன்றி உள்ள ஜீவன் இருக்கவே முடியாது, அந்த நாய் காலை சுற்றி சுற்றி வரும், 

தன் எஜமானனுக்கு அது உண்மையாக ஊழியம் செய்யும், அந்த நாய்க்கு  காலை வார தெரியாது, இதை எதற்காக நான் சொல்கிறேன் என்பதை எடப்பாடி பழனிச்சாமி  உணர வேண்டும், நீங்கள் சின்னம்மாவுக்கு எப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள், தேர்தல் நேரத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா அவர்கள் ஏதோ பேசியதற்காக என் அம்மாவைப் பற்றி ராசா தவறாக பேசிவிட்டார் என மக்கள் மத்தியில் கண்ணீர் வடித்து, கொங்கு மக்களின் ஆதரவைத் திரட்ட ஒரு நாடகத்தை நடத்தினீர்களே அது சரியா? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று சொன்னான் பாரதி. ஆனால், ஒரு பெண் என்றும் பாராமல், ஒரு கட்சியினுடைய தலைவி என்றும் பாராமல் நீங்கள் சின்னம்மாவை அசிங்கமாக பேசியது நியாயமா? 

அண்ணன் ஓபிஎஸ்சை பார்த்து நான் கேட்கிறேன், தமிழக மக்கள் குறிப்பாக தென் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் எடப்பாடியின் பேச்சை மன்னிப்பார்களா? எடப்பாடி நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார், இன்னுமா நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இதை நீங்கள் தட்டிக் கேளுங்கள், அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள், எடப்பாடி பழனிசாமி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம், அவர் நாய் என்று சொல்வதை வேடிக்கை பார்ப்பது கேவலமான விஷயம், எடப்பாடி பழனிச்சாமியை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இதே போல தான் ஒரு சாதியைப் பற்றிப் இழிவாக பேசி ஐந்து மாதங்கள் கழித்து மன்னிப்பு கேட்டார் சி.வி சண்முகம், எனவே  பழனிச்சாமி அவர்களே வாயை அடக்குங்கள், என புகழேந்தி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.  
 

click me!