
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கைய்யா நாயுடு இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் நேரம் கேட்டுள்ளார்.
பிரதமருடனான சந்திப்பின் போது நீட் தேர்வு விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி விவகாரம் குறித்தும் பேசப்படலாம் எனவும், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஓபிஎஸ்சும் டில்லி சென்றுள்ளதால் பிரதமர் முன்னிலையில் அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரதமரை சந்தித்த பிறகு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளார். நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.