
ஜன கண மன பாடலில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை இந்த திராவிடம் இருக்கும் என்றும் இதற்கு அடுத்தபடியாக தமிழகம், தென்னகம் இவற்றோடு முடிவடையவில்லை, நாடு தழுவியது இந்த திராவிடம் என நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
கடந்த 1942ம் ஆண்டு, திமுக தலைவர் கருணாநிதியால் துண்டறிக்கையாக தொடங்கப்பட்ட முரசொலி, இதையடுத்து 1948ஆம் ஆண்டு வார இதழாக மாறியது.
பின்னர் 1960ம் ஆண்டில் இருந்து நாளிதழாக , இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் முரசொலியின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது பேசிய நடிகர் கமல்ஹாசன், இது பத்திரிக்கையின் வெற்றி விழா. இந்த விழாவில் நான் என்ன அரசியல் பேசவா வந்திருக்கிறேன். அதற்கான மேடையா இது? என கேள்வி எழுப்பினார்.
இனிமேல் திராவிடமே இருக்காது என்றெல்லாம் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜன கண மன-வில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை இந்த திராவிடம் இருக்கும் என்று கமல் தெரிவித்தார்.
இதற்கு அடுத்தபடியாக தமிழகம், தென்னகம் இவற்றோடு முடிவடையவில்லை, நாடு தழுவியது இந்த திராவிடம் என்று கமல்ஹாசன் அதிரடியாக பேசினார்.