
வர்தா புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்கிறார்.
தமிழகத்திற்கு வர்தா புயலின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காக கோரப்பட்ட வறட்சி நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதையடுத்து நாளை அவர் பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படலாம் என்றும் தெரிகிறது. அதுமட்டுமின்றி அதிமுகவில் இரு அணிகளாக பிளவுபட்டு இதுவரை யாருக்கும் இரட்டை இலை சின்னம் வழங்கப்படவில்லை. இது குறித்தும் எடப்பாடி பிரதமருக்கு கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழலும், குடியரசுத் தலைவருக்கான தேர்தலும் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய டெல்லி பயணம் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு முடிவதால், பிரதமரிடம் வாழ்த்தும் பெறும் எண்ணமும் எடப்பாடிக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.