
முதல்வர் எங்க முன்னாள் நண்பர்; பங்காளிதான் அவரு... அவரை சந்திக்கக் கூடாதுன்னு என்ன இருக்கு? என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சியூட்டினார் டிடிவி தினகரன்.
இன்று சட்டசபையில் தனது கன்னிப்பேச்சை முடித்துக் கொண்டு வெளியே காரில் சென்ற தினகரனை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய தினகரன், தான் முதல்வரை சந்திக்கக் கூடாது என்று என்ன இருக்கிறது?அவரை சந்திப்பேன். குறைகளை தெரிவிப்பேன்.. என்று கூறினார்.
முன்னர் எங்களது புகாரை ஆளுநரிடம் கொடுத்தோம். ஏற்கெனவே நடவடிக்கை எடுக்காத ஆளுநர் மாற்றலாகி விட்டார். இப்போது புதிய ஆளுநர் வந்திருக்கிறார். அவரும் நீதிமன்ற ஆணைக்கு இணங்க நடவடிக்கை எடுப்பார். எடுத்துத்தானே ஆக வேண்டும். எடுக்காவிட்டால் கேட்போம். அதுவரையில் இவர் முதல்வராகத்தானே இருக்க வேண்டும். அதனால், அவர் முதல்வர். தேவைப்பட்டால் அவரை சந்திப்பேன். அவரிடம் குறைகளை தெரிவிப்பேன் என்று கூறினார்.
அவரைப் பார்க்கக் கூடாது என்று என்ன இருக்கிறது? அவர் எங்கள் பங்காளி, எங்கள் முன்னாள் நண்பர் என்று கூறிய தினகரன், தனது முதல் நாள் சட்டசபை அனுபவத்தைப் பற்றி சிரித்துக் கொண்டே சொன்னார். “இன்று சட்டசபையில் முதல் அனுபவம். ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவன். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் தமிழில் பேசுவது மிகவும் சிலிர்ப்பாக இருக்கிறது என்று கூறிய தினகரன், திமுக.,வினர் எதற்காக வெளிநடப்பு செய்தார்கள் என்று தனக்குத் தெரியாது என ஆச்சரியத்துடன் சொன்னார்.
திமுக.,வினர் வெளிநடப்பு செய்தார்கள் ஆனால் எதற்கு என்று எனக்கு தெரியாது. என்னைப்பற்றி சொல்லும் போது, திமுக., கூட்டணி என்று சொல்கிறார்கள். ஆனால், இது மக்கள் நலனுக்கு விரோதமான அரசு. அவ்வாறு செயல்படும் அரசுக்கு எதிராக யார் இருந்தாலும் நாம் சேரத்தானே செய்வோம் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் குறைந்த நாட்கள்தான் நடக்கிறது. ஏதோ எல்லாரும் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். எம். எல்.ஏ.க்களுக்கு ஏதோ இன்ஷ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் பார்த்ததும் தலையை தொங்கப் போட்டுக் கொள்கிறார்கள். அல்லது எங்கோ பார்க்கிறார்கள். தலையைக் குனிந்து கொண்டு சிரிக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் பாக்க கொஞ்சாம் ‘இதா’த்தான் இருந்தது என்று ஒரு பொடி வைத்தார் தினகரன்.