அறம் தவறிய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 4:47 PM IST
Highlights

மாணவ-மாணவிகளுக்கு இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவரது பெற்றோர் கேட்டபோதும் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் தான் பயிலும் பள்ளியில் படிப்பை தொடர விருப்பமில்லை என அவர் பெற்றோரிடம் கூறி வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவிக்கு சின்மயா பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் அவரது தொல்லை தாளாமல்தான் அந்த மாணவி வேறு பள்ளிக்கு டிசி வாங்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேறு பள்ளிக்குச் சென்ற பின்னரும் அந்த மாணவியை விடாமல் மிதுன் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் யாராவது இடித்துவிட்டது போல் இதை கடந்த போ என கூறியதாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து மிதுனையும் பள்ளி முதல்வரையும் கைது செய்யக்கோரி சக மாணவிகள், அவர்களது பெற்றோர், இறந்த மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் பாலியல் குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. அதை தொடர்ந்து அவர் தலைமறைவு ஆனார். இதை அடுத்து தனிப்படை போலீஸார் அவரை தீவிரமாக தேடிய நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,  தமிழகம் முழுவதும் அதிர்வலையை  ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற  துயர செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாணவ-மாணவிகளுக்கு இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!