மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு திமுக தான் காரணம்… எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 6:37 PM IST
Highlights

திமுக அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் தான் மழையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் தான் மழையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பேரிடர் மீட்பு படையினர் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பெய்து இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது. வரும் 10 ஆம் தேதியும் 11 ஆம் தேதியும் அதீத கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெளியூர்களுக்கு சென்ற மக்கள் அடுத்த சில நாட்களுக்கு சென்னைக்கு திரும்ப வேண்டாம் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பெசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே திட்டமிட்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த வீதிகளில் தண்ணீர் தேங்கும் என்பதனை அறிந்து அதற்கேற்றவாறு முன்னேற்பாடுகளை செய்ததாகவும்  தற்போது வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டில் திமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளது என்றும் குற்றம்சாட்டிய அவர், திமுக அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் தான் மழையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விருகம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை என அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, முழங்கால் அளவு மழை தண்ணீர் தேங்கி இருந்தும் அதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லலை என்று தெரிவித்தார். மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் ராட்சத மின் மோட்டர்களை கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசு இனியாவது போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!