பார்க்கலாம்னு தான் சொன்னோம்..! பிரேமலதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்!

By Selva KathirFirst Published Feb 27, 2020, 1:11 PM IST
Highlights

மாநிலங்களவை எம்பி பதவி கேட்ட போது எதிர்காலத்தில் பார்க்கலாம் என்று தான் கூறினோமே தவிர நிச்சயமாக தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை என்று தேமுதிகவிற்கு அதிமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக மூலமாக அதிமுக கூட்டணிக்கு அழைத்துவரப்பட்ட கட்சி தேமுதிக. பாஜக மற்றும் பாமக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் கவுரவமான தொகுதிகளை பெற்ற நிலையில் தேமுதிகாவால் அதனை பெற முடியவில்லை. ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேமுதிக அம்பலமாகிப்போனது. இருந்தாலும் கூட பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து 4 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. 4 தொகுதிகளிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதற்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரால் செய்தியாளர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது. அதன்படி தேர்தலுக்கு பிறகு அன்புமணி ராமதாசுக்கு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி ஒதுக்கப்பட்டது. அதே சமயம் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ராஜ்யசபா எம்பி பதவி குறித்து எதுவும வாக்குறுதி அளிக்கப்படவில்லை.

ஆனால் தங்களுக்கும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதாக கடந்த ஒரு வருடமாகவே தேமுதிக கூறி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக மவுனம் காத்து வருகிறது. மேலும் கூட்டணி தர்மம் என்று அடிக்கடி பிரேமலதா பேசி வருகிறார். இதற்கு காரணம் கூட்டணி பேச்சின் போது ஒப்புக் கொண்டபடி தேமுதிகவிற்கு ஒரு எம்பி பதவி தர வேண்டும் என்பது தான். ஆனால் இந்த விவகாரத்தில் அதிமுகவிடம் இருந்து தேமுதிகவிற்கு சாதகமாக பதில் எதுவும் வந்தபாடில்லை. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 எம்பி பதவிகளில் திமுகவிற்கு 3 இடங்களும் அதிமுகவிற்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதி. அதிமுகவிற்கு கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றைத்தான் தேமுதிக கோரி வருகிறது. இது குறித்து பேச அதிமுக தலைமையை தேமுதிக தொடர்பு கொண்ட போது அங்கிருந்து எதிர்பார்த்த ரியாக்சன் கிடைக்கவில்லை. இதனால் டென்சன் ஆன பிரேமலதா, கூட்டணி தர்மத்தின் படி அதிமுக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். அதாவது தேமுதிகவிற்கு ஒரு எம்பி பதவியை கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக நிபந்தனை விதித்துள்ளார் பிரேமலதா.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரேமலதா தனது தனிப்பட்ட விருப்பத்தை கூறியுள்ளதாகவும், அவர்களுக்கு எம்பி பதவி கொடுப்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் என்று கூறி கை விரித்துவிட்டார். இது குறித்தது அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது 8 தொகுதிகளை தேமுதிக கேட்டதாகவும், ஆனால் 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அதிமுக கூறிய போது அப்படி என்றால் ராஜ்யசபா எம்பி பதவி ஒன்று வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்ததாக சொல்கிறார்கள். ஆனால் வாக்குறுதி எல்லாம் கொடுக்காமல் எதிர்காலத்தில் பார்க்கலாம் என்று கூறியே தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக அதிமுக தரப்பு தெரிவிக்கிறது.

click me!