கருணாநிதியின் சொந்த ஊரிலேயே தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்: எடப்பாடியின் இடைத்தேர்தல் சபதம்..!

By thenmozhi gFirst Published Nov 26, 2018, 2:08 PM IST
Highlights

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் உறுதியாகிவிட்டது.  பிப்ரவரி 7-க்குள் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் தேதி குறித்திருக்க, எடப்பாடி தரப்போ ’அங்கே தி.மு.க.வை தோற்கடித்தே தீருவது’ என்று சபதமிட்டுள்ளது. 

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் உறுதியாகிவிட்டது.  பிப்ரவரி 7-க்குள் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் தேதி குறித்திருக்க, எடப்பாடி தரப்போ ’அங்கே தி.மு.க.வை தோற்கடித்தே தீருவது’ என்று சபதமிட்டுள்ளது. 

குளித்தலை தொகுதியில் முதல் முறையாக எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டதில் துவங்கி, திருவாரூரில் இறுதியாக போட்டியிட்டது வரை தோல்வியையே கண்டறிந்திராதவர் கருணாநிதி. இந்நிலையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து அவர் இறந்துள்ள நிலையில், அவர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது. 

உட்கட்சி குழப்பங்களால் கடும் சேதாரத்திலிருக்கும் அ.தி.மு.க. அரசு, அங்கே இடைத்தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமான நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் என்று மொத்தம் 20 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது அவசியமாகி நின்றது. ஆளும் அ.தி.மு.க. அரசை  ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மட்டுமில்லாது, தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் சாய்த்திட துடித்துக் கொண்டிருக்கும்  நிலையில்  இடைத்தேர்தல்கள் நடப்பது சாத்தியம் தானா? எனும் கேள்வி எழுந்தது. 

அதிலும் இருபது தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றில் ஆளுங்கட்சி தோற்றுவிட்டால், ஆட்சியே கவிழ்வது உறுதி எனும் நிலையில் நிச்சயம் இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள்! ஏதாவது காரணம் சொல்லி இழுத்தடிப்பார்கள்! என்றும் பேசப்பட்டது. 

ஆனால் இருபது தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அ.தி.மு.க. இடைத்தேர்தலுக்கு ரெடி! என்று நெஞ்சு நிமிர்த்தவும் செய்திருக்கிறது அரசு. எதிர்கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் இது உண்மைதானா? என்று தங்களை கிள்ளிப் பார்த்து தெளிந்திருக்கின்றனர்.  ஆனாலும் ‘நடக்கட்டும் பார்க்கலாம்’ என்றுதான் நினைத்திருந்தனர். 

இந்நிலையில் ‘பிப்ரவரி 7-க்குள் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்று தேர்தல் ஆணையம் இன்ரு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் தெரிவித்திருக்கிறது. கஜா புயல் பரபரப்பையும் தாண்டி, பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது இந்த விஷயம். 

இந்நிலையில் “தேர்தலில் தோல்விகளையே சந்தித்திராத கருணாநிதி கடைசியாக ஜெயித்த அதே திருவாரூர் தொகுதியில் தி.மு.க.வை தோற்கடித்தே தீர வேண்டும். அதுவும் கருணாநிதியின் சொந்த ஊர் இது. இங்கு அவர்களின் இழப்பு, மீள முடியாத இழப்பாய் அமையட்டும். 

இடைத்தேர்தல்களில் அதிக இடம் ஜெயிப்பு, ஆட்சி கவிழ்ப்பு! என்றெல்லாம் பெரும் கனவில் இருக்கும் தி.மு.க.வுக்கு, இந்த அடி சம்மட்டியடியாய் அமைய வேண்டும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யுங்கள்.” என்று சபதமே போட்டுள்ளார் எடப்பாடி. 

என்ன நடக்குமோ? வீ ஆர் வெயிட்டிங்.

click me!