
இரட்டை இலைச் சின்னம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியான நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையமோ இன்னும் அதிகாரபூர்வமாக இதனை அறிவிக்க வில்லை என்று கூறியுள்ளது. அதற்குள்ளாக முதல்வர் முந்திரிக் கொட்டைத் தனமாக, ஊடகங்களுக்கு பேட்டி அளித்துவிட்டார்.
இது குறித்து அவர் ஊடகங்களிடம் பேசிய போது, தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறினார்.
இதனிடையே அதிமுக., தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுடியே அல்லோலகல்லோலப் பட்டது. பெருமளவில் தொண்டர்கள் அந்தப் பகுதியில் கூடி, தங்கள் மகிழ்ச்சியை இனிப்பு கொடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
இரட்டை இலை சின்னம் தங்களது அணிக்கே என்று கோஷமிட்டு, முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக அவர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப் பட்டது,
பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. காரணம், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்தக் கொண்டாட்டம் என்பதால்தான் குழப்பம் நிலவியது.
முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, தமிழக ஊடகங்களில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம்... அறிவித்தது தேர்தல் ஆணையம்
. அதிமுக கட்சி, கொடி அனைத்தும் இனி எடப்பாடி அணிக்கே என்றும் அதிமுக, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய தினகரன் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் செய்திகள் வெளியாயின.
இதனால் எடப்பாடி தரப்பினர் பெரும் உற்சாகம் அடைந்தனர். ஆனால், இந்தத் தகவல்களால் தேர்டல் ஆணையம் கடுப்பானது. நாங்கள் மதியம் 2 மணிக்கு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறியிருந்த நிலையில், ஊடகங்கள் முந்திக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தது. தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா ஆணையத்தின் அதிருப்தியை வெளியிட்டார்.
ஆனால், இந்தத் தகவலை நம்பி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே, மகிழ்ச்சி தெரிவித்து பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.