தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வுமாம்...! புகழேந்தியின் புது விளக்கம்!

First Published Nov 23, 2017, 1:36 PM IST
Highlights
Pugalendi gives a new explanation


எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகிய நிலையில், இரட்டை இலை சின்னம், எதிரணிக்கு ஒதுக்கப்பட்டால் அது அநீதியாகும் என்று கர்நாடக மாநிலம் அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ். குரல் கொடுத்தார். அப்போது சசிகலா அணியில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இவ்விரு அணிகளும் போட்டியிட்டன. இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால் இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் இணைந்து சசிகலா தினகரனை ஓரம் கட்டினர். இந்த நிலையில் ஒருங்கிணைந்த ஓ.பி.எஸ்-இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என 2 அணிகளாக தற்போது செயல்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இவ்விரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். 

இவ்விரு அணிகளும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தேர்தல் ஆணையத்தில் முன் வைக்கப்பட்டன. இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவாளர் கர்நாடக மாநிலம் அதிமுக செயலாளர் புகழேந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. டிவி சேனல்களில் வெளியான செய்தி அடிப்படையில்தான், நான் கருத்து சொல்கிறேன்.

ஒரு வேளை எதிரணிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால், அது அநீதியாகும். உ.பி.யில் தந்தை மகன் நடுவே தகராறு நடைபெற்று சின்னத்திற்கு சமாஜ்வாதி கட்சியினர் சண்டை போட்டதையும், அதிமுக விவகாரத்தையும் ஒன்றாக கருத முடியாது. அதிமுகவில் பொது செயலாளர் யார் என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் அவசரமாக இந்த தீர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை

அவசரமாக சின்னத்தை ஒதுக்கி அவசரமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, இடைத்தேர்தலை நடத்துவது போன்ற வேலைகளில் எடப்பாடி அணி ஈடுபட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். எங்கள் அணியில் எந்தவித குழப்பமும் கிடையாது என்ற புகழேந்தி தெரிவித்தார். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் புகழேந்தி கூறினார்.

click me!