
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி எதன் அடிப்படையில் சொன்னார் என தெரியவில்லை என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், பழனிசாமி மற்றும் தினகரன் ஆகிய தரப்புகளின் வாதங்களைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம் இன்று இறுதிமுடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம், முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அத்தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 90% எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் அணியில் உள்ளதாலும் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ததாலும் நியாயமான முறையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே, தங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டதற்கு நன்றி என முதல்வர் எப்படி தெரிவித்தார் என்று தெரியவில்லை என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். ஒருவேளை முதல்வருக்கு தேர்தல் ஆணையர் போன் போட்டு இந்த செய்தியை தனிப்பட்ட முறையில் கூறினாரா? என தெரியவில்லை என முதல்வரை புகழேந்தி கிண்டலடித்துள்ளார்.