Eswaran : மோடி அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கணும்.. மத்திய அரசை பாராட்டி தீர்த்த திமுக கூட்டணி கட்சி!

Published : Dec 16, 2021, 10:33 PM IST
Eswaran : மோடி அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கணும்.. மத்திய அரசை பாராட்டி தீர்த்த திமுக கூட்டணி கட்சி!

சுருக்கம்

மத்திய அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்தி இருப்பது குடும்பங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. பல குடும்பங்கள் சந்தித்து வருகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக அமையும். 

21ஆக உயர்த்தப்பட்ட பெண்களின் திருமண வயது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி சட்டத்திருத்தம் கொண்டுவர ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்போடு முடிவெடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.    

இதுதொடர்பாக ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பல ஆண்டுகளாக பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆண்களும், பெண்களும் சமம் என்ற கால சூழ்நிலையில் இருபாலருக்கும் உள்ள திருமண வயது வரம்புச் சட்டத்தை சமமாக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுவாகவே தேவையான ஒன்றாக இருந்தது. 18 வயதில் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைத்துணையை முடிவு செய்யக்கூடிய பக்குவம் வருவதில்லை. பல்வேறு தவறான முடிவுகளை பெண்கள் எடுப்பதன் மூலமாக விவாகரத்து அதிகமாவது உள்பட பல்வேறு பிரச்சனைகளை குடும்ப வாழ்க்கையில் சந்தித்து வந்தார்கள்.

18 வயதில் வெகு சுலபமாக ஆசை வார்த்தைகளை கேட்டு ஏமாறுவதும் அதிகமாக நடந்து வந்தது. சட்டப்படி பெண்களுக்கு திருமண வயது 18 என்பது பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு உதவியாக இருந்து வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 21ஆக அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 18 வயதில் ஓட்டுரிமைப் பெற்று நாட்டின் பிரதமர் வரை தேர்ந்தெடுக்கக் கூடிய பெண்கள் ஏன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற விவாதம் சில தரப்பினரிடம் இருந்து எங்களுக்கு எதிராக வைக்கப்பட்டது. 

வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ, மக்கள் பிரதிநிதியோ சரி இல்லை என்றால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, ஆனால் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால் கட்டிய கணவனை மாற்ற முடியுமா என்று பதிலடி கொடுத்து வந்தோம். எங்களை போன்றவர்களுடைய வாதத்திலிருந்து உண்மைகளைப் புரிந்து கொண்டு மத்திய அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்தி இருப்பது குடும்பங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. பல குடும்பங்கள் சந்தித்து வருகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக அமையும். 

பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் கொஞ்சம் நிம்மதி அடைவார்கள். வெகு விரைவில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி சட்டத்திருத்தம் கொண்டுவர ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்போடு முடிவெடுக்க வேண்டும். வர இருக்கிற பெண்கள் திருமண திருத்தச் சட்டத்திற்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு பாராட்டுகளையும்,  நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..