சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் சொந்தமான இடங்களில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சத்யாவுக்கு சொந்தமான கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாக அதாவது 16.33 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்எல்ஏவாக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக சத்யா மீது குற்றம்சாட்டப்படுள்ளது. முன்னாள் எம்எல்ஏ சத்யா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யா கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த மனுவில், தனக்கு 2.77 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் சொத்துகளை மறைத்து மனுதாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 2 மாதங்களில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல், சென்னை தண்டையார்பேட்டையில், வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.