பட்டியலினப் பெண் சமைத்த உணவை உண்ணக் கூடாது என்பது மிகக் கொடிய தீண்டாமை.. இதை ஏத்துக்கவே முடியாது.. அன்புமணி.!

By vinoth kumar  |  First Published Sep 13, 2023, 7:31 AM IST

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் உணவில் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


உணவை சமைத்தவர் பட்டியலினத்தவர் என்பதால், அந்த உணவை சாப்பிடக் கூடாது என்று குழந்தைகளைத் தடுப்பது மிகக் கொடிய தீண்டாமைக் குற்றம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பட்டியலினப் பெண் சமைத்த உணவை உட்கொள்ள மாணவர்கள் மறுப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனையளிக்கின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் உணவில் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Latest Videos

undefined

தமிழ்நாடு முழுமைக்கும் அண்மையில் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் உசிலம்பட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் முனிய செல்வி என்ற  பட்டியலினப் பெண்மணி சமையலராக பணியாற்றி வருகிறார். அவர் சமைத்த உணவை தங்களின் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பள்ளியில் பெரும்பான்மையான பிள்ளைகள் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து வந்துள்ளனர். உணவை சமைத்தவர் பட்டியலினத்தவர் என்பதால், அந்த உணவை சாப்பிடக்கூடாது  என்று   குழந்தைகளைத் தடுப்பது மிகக்கொடிய தீண்டாமைக் குற்றம்; இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

இதையும் படிங்க;- இது பெரும் சமூக அநீதி.. மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை கூட காட்டப்படாதது நியாயமல்ல.. கொதிக்கும் அன்புமணி.!

பொதுவாகவே குழந்தைகளின் மனம் கள்ளங்கபடமற்றது; உசிலம்பட்டி பள்ளி மாணவ, மாணவியரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பட்டியலினப் பெண் சமைத்த காலை உணவை சாப்பிடுவதற்கு அவர்கள் தயாராகவே இருந்துள்ளனர். பல குழந்தைகள் உணவை சுவைத்துப் பார்த்து நன்றாக இருப்பதாகவும்  கூறியுள்ளனர். அவர்களின் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, குழந்தைகள் காலை உணவை தவிர்த்துள்ளனர். பெற்றோருக்கும், சமையலருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்தச் சிக்கலுக்கு முடிவு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கிறது என்றாலும் கூட, உணவில் தீண்டாமை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

பட்டியலினப் பெண் சமைத்தார் என்பதற்காக மாணவர்கள் உணவைப் புறக்கணிப்பதும், அவ்வாறு செய்ய அவர்களை அவர்களின் பெற்றோர் தூண்டுவதும் இப்போது தான் முதன்முதலில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. ஏற்கனவே, பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இவை எதிலுமே மாணவர்களுக்கு தொடர்பு இல்லை. பெற்றோரும், சுற்றத்தாரும் அளித்த அழுத்தம் காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் பயிலும் நூலின் முதல் பக்கத்தில், அவர்கள் படிக்கும்  முதல் சொற்றொடரே, ‘‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்’’ என்பது தான். அத்தகைய குழந்தைகளை, பட்டியலினத்தவர் சமைத்த உணவை உண்ணக்கூடாது என்று தடுப்பது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கும் செயல் ஆகும்.

இதையும் படிங்க;-  பாமகாவை பார்த்து அஞ்சும் தமிழக அரசு! அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது ஜனநாயக படுகொலை! கொதிக்கும் அன்புமணி.!

சாதியின் பெயரால் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைக்கும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலத்திலிருந்து விலகி நாம் வெகுதூரம் பயணம் செய்து விட்டோம். சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்காமல் இலக்கை அடைவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். உணவில் தீண்டாமையை கடைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, கடந்த வந்த பாதையிலேயே திரும்பிப் பயணிப்பது தான் பிற்போக்கான செயலாகும். இது கடந்த காலங்களில் நாம் போராடி, வென்றெடுத்த சமூகநீதியை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது. பட்டியலின சகோதரர்களும் மனிதர்கள் தான். தமிழ்நாட்டின் அனைத்து அசைவுகளிலும், மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய எல்லா நிகழ்வுகளிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. 

நிலத்தில் நெல்லை நடவு செய்வதில் தொடங்கி அறுவடை செய்வது வரை அவர்களின் உழைப்பு உள்ளது; காய்கறிகள் சாகுபடியிலும், விற்பனையிலும் அவர்கள் பங்கு வகிக்கின்றனர்; பால் உற்பத்தியில் அவர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது; நாம் வாழும் வீடுகளின் கட்டுமானம் அவர்கள் இல்லாவிட்டால் சாத்தியம் இல்லை. பட்டியலின மக்களின் இத்தகைய பங்களிப்புகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் நாம், அவர்கள் சமைத்த உணவை உண்ணக் கூடாது என்று குழந்தைகளை தடுப்பது தவறு; நியாயப்படுத்த முடியாதது. எனவே, உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பட்டியலின மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!