வேலூர் மக்களவை தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என திமுக பொருளார் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 37 இடங்களில் மாபெறும் வெற்றி பெற்றது. 3 மாதத்திற்கு பிறகு நடந்த வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கடுமையாக போராடியே வெற்றி பெற்றார்.
இது குறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ’’நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தோம். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. பொதுத்தேர்தலின் போது வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இருந்தால் விளைவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
தொகுதியில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு, அதன் கீழ் வரும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் 5 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டது. மாதிரி நடத்தை விதிமுறை, அரசு அறிவிப்புகள் வெளியிடுவதைத் தடை செய்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதை ஒரு தாலுகா தலைமையகமாக மாற்றுவதாக உறுதியளித்தார்.
கே.வி.குப்பம், குடியாத்ததில் இருந்து 8 கி.மீ தூரத்திலும், காட்பாடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. குடியாத்தம் மற்றும் காட்பாடி ஆகிய 2 இடங்களிலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளன. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில், வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிப்பதாக அவர் உறுதியளித்தார். இந்த வாக்குறுதிகள் மாதிரி நடத்தை விதிகளை மீறும் வகையில் செய்யப்பட்டன. அவர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்கள் மனதை குழப்பினர்.
தி.மு.க. தவறான வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் குற்றம் சாட்டினார். உண்மையில், அவரும் அவரது அமைச்சர்களும் தான் தவறான வாக்குறுதிகளை அளித்தனர். பொதுத்தேர்தலில் கூட முஸ்லிம்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். எனவே காஷ்மீர் பிரச்சனைக்கும், தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இடைத்தேர்தல்களில் ஆம்பூர், குடியாத்தம் உட்பட 13 சட்டமன்ற இடங்களை நாங்கள் வென்றோம்.
வாக்காளர்களை அவர்களின் சாதி அடிப்படையில் வேறுபடுத்த நான் விரும்பவில்லை. முதலியார்கள் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்திருந்தால், முதலியார்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் அதிக வாக்குகளை பெற்றிருக்க மாட்டோம். சுமார் 40,000 முதலியார்களைக் கொண்ட குடியாத்தத்தில் அவர் எதிர்பார்த்த ஓட்டு கிடைக்கவில்லை’’ என அவர் தெரிவித்தார்.