
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும், நன்கு பேசுபவர்களை ஆளும் கட்சி தலைவர்களுக்கு பிடிக்கும். அதனால், சில நேரங்களில் மனம் திறந்து பாராட்டுவதும் உண்டு.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அனைவருக்குமே இந்த குணம் உண்டு.
அந்த வகையில், எதிர் கட்சி வரிசையில் இருந்த துரைமுருகனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா பாராட்டுவதும், சபை முடிந்த பின் கேலி செய்வதும் கூட உண்டு.
ஒரு முறை, சட்டமன்ற கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில், அருகில் வந்து கொண்டிருந்த துரைமுருகனை அழைத்தார் ஜெயலலிதா.
அவரும் என்ன மேடம் என்று அருகில் வந்துள்ளார். துரை முருகன்… நீங்கள் அரசியலுக்கு வராமல் சினிமாவுக்கு வந்திருந்தால் நல்ல நடிகராகி இருப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதை கேட்டு, அவர்களுடன், அருகில் இருந்தவர்களின் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகி இருக்கிறது.
அப்போது, உங்களுக்கு என்ன மேடம், நிறைய படிக்கிறீர்கள், எந்த கேள்வி கேட்டாலும் விரல் நுனியில் பதில் வைத்திருக்கிறீர்கள் என்று துரைமுருகன் வியந்து பாராட்டி இருக்கிறார்.
ஜெயலலிதா இறந்த பின்னர், திமுக மேடையில் இந்த சம்பவத்தை வெளிப்படையாகவே பேசிய துரைமுருகன், ஜெயலலிதா இருந்த போது, சட்டமன்றம் எப்படி இருந்தது. தற்போது எப்படி இருக்கிறது என்று விளக்கினார்.
திமுக தலைவர்கள் பலரும், ஜெயலலிதா ஆளக்கூடாது என்றுதான் சொன்னோமே ஒழிய, வாழக்கூடாது என்று ஒருபோதும் சொல்லவில்லை என்றே பல மேடைகளில் பேசினர்.
இந்நிலையில், வேலூரில் நடந்த கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய துரைமுருகன், சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்று கூறி உள்ளார்.
மேலும், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்த கட்டுப்பாடு தற்போது இல்லை என்றும், அவர் வருத்தப்பட்டார்.
தெளிவாக கேள்வி கேட்பவர்கள், வாதம் செய்பவர்கள், உரிய விளக்கம் சொல்பவர்கள் இல்லை என்றால், சட்டமன்றமும் களை இழந்து விடும் என்பதை துரைமுருகனின் கூற்று வெளிப்படுத்தி உள்ளது.