ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் எனக்கு இல்ல.. உங்களுக்குத்தான்.. துரைமுருகன், பொன்முடிக்கு பீதி கிளப்பிய CV.சண்முகம்

By Selva KathirFirst Published Nov 18, 2020, 12:55 PM IST
Highlights

திண்டிவனம் அருகே உள்ள வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை திமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்கான ஸ்கெட்ச் என்று பகீர் கிளப்பியுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

திண்டிவனம் அருகே உள்ள வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை திமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்கான ஸ்கெட்ச் என்று பகீர் கிளப்பியுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

விழுப்புரம் மாவட்ட வானூர் அருகே கல்குவாரிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் ஒரு குவாரியை நடத்த வானூர் அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரை தற்போது கனிமவளத்துறையை கவனித்து வரும்அமைச்சர் சி.வி.சண்முகம் தான் ஒதுக்கீடு செய்தார் என்பது மு.க.ஸ்டாலினின் புகார். எம்எல்ஏ ஒருவரின் மகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு இருப்பதாகவும் எனவே சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதோடு அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகனுக்கு வழங்கப்பட்ட கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விரிவாக பதில் அளித்திருந்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் குடும்பத்தினர் அரசின் டெண்டர்களை எடுக்க கூடாது என எந்த சட்டமும் இல்லை. டெண்டர் விடுவதில் முறைகேடு செய்வது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்றவை தான் சட்டப்படி குற்றம். மற்றபடி எம்எல்ஏ, எம்பியாக ஏன் அமைச்சர்களாக இருக்க கூடியவர்களின் குடும்பத்தினர் கூட பொது டெண்டர்களில் பங்கேற்கு அரசுப் பணிகளை பெறலாம்.

இது சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். அவர் பாணியில் கூற வேண்டும் என்றால் தேங்காய் புளித்ததோ, மாங்காய் புளித்ததே என்று பேசுகிறார். முதலில் மு.க.ஸ்டாலின் மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அப்படியே வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அரசு டெண்டர்களில் பங்கேற்க கூடாது என்று எந்த சட்டத்தில் கூறியுள்ளது என்று ஸ்டாலின் முதலில் விளக்க வேண்டும். அப்படி விளக்கி விட்டால் அடுத்த நொடியே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.

எனவே ஸ்டாலின் சட்ட நிபுணர்களை அழைத்து டெண்டர் எடுக்க மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்களுக்கு தடை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரி ஒரு பேச்சுக்கு மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அரசு டெண்டர்களை எடுக்க கூடாது என்று வைத்துக் கொண்டால், திமுகவினருக்கு ஒரு நியாயம் அதிமுகவினருக்கு ஒரு நியாயமா? திமுக ஆட்சியில் இருந்த போது விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் செம்மண் அள்ள அனுமதி பெற்றது யார்? வேறு யாரும் இல்லை அப்போது அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி. அவர் தற்போது எம்பியாக உள்ளார்.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்ன என்றால்? அப்போது பொன்முடியின் மகன் கவுதமசிகாமணிக்கு செம்மண் குவாரி அமைக்க டெண்டர் எல்லாம் கோரப்படவில்லை. ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே வழங்கி கவுதமசிகாமணி குவாரியை பெற்றுவிட்டார். மேலும் அப்போது அந்த துறைக்கு அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அதாவது தந்தை துறையில் உள்ள ஒரு குவாரியை டெண்டர் இல்லாமல் விண்ணப்பம் அளித்து பெற்றவர் கவுதமசிகாமணி. இப்போது பொன்முடியை பதவியில் இருந்து விலகுமாறு ஸ்டாலின் கூறுவாரா?

இதே போல் திமுக பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனின் மருமகள் பெயரில் ஏராளமான மணல் குவாரிகள் வேலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் ஒரே தன்மை கொண்டவர்கள் தான். இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று கிடையாது. எனவே பொன்முடி, துரைமுருகனை பதவி விலகுமாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிடட்டும் நானும் பதவி விலகுகிறேன். எனக்கு தெரிந்தவரை ஸ்டாலின் என்னை பதவியில் இருந்து விலகுமாறு இந்த அறிக்கையை வெளியிடவில்லை.

என்னை பதவி விலகுமாறு கூறி அவரது கட்சியை சேர்ந்த துரைமுருகன் மற்றும் பொன்முடியைத்தான் பதவி விலகுமாறு மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் தற்போது அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்போட்டி உள்ளது. ஸ்டாலினை கவிழ்க்க மூத்த நிர்வாகிகள் முயன்று வருகிறார்கள். எனவே அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த இப்படி எனக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது போல் திமுக நிர்வாகிகளைத்தான் ஸ்டாலின் குறி வைத்துள்ளார். இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.

click me!