மாறி மாறி மோதிக்கொள்ளும் துரைமுருகன் - ஓபிஎஸ்.. பெரு மழைக்கு இடையேயும் ஓயாத அறிக்கை போர்..!

By Asianet TamilFirst Published Nov 7, 2021, 10:28 PM IST
Highlights

இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. எனவே, பொதுப்பணித் துறை காலண்டரில் சென்ற தேதி இருக்கிறதா என்பதை அவர்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் அப்போதும் உண்மையைச் சொல்வார்களா என்பதும் சந்தேகம்தான்.” என்று அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

விளம்பரத்திற்காக ஆய்வு செய்தவர்கள்தான் தேதி எல்லாம் குறித்து வைப்பார்கள். மக்களுக்கு நன்மை செய்ய உள்ள உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்வோர்கள் சென்ற தேதியை குறித்து வைக்க மாட்டார்கள் என்று முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் துரைமுருகன் - ஓபிஎஸ் இடையே தொடர்கிறது அறிக்கைப் போர்.

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அறிக்கை போர் நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்தது பற்றி அறிக்கை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன், “ஓபிஎஸ்ஸோ அல்லது இபிஎஸ்ஸோ ஒரு முறையாவது இந்த அணைக்கு சென்று பார்த்திருக்கிறார்களா? 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் ஒரு முறை கூட இந்த அணையை இந்த இரண்டு முன்னாள் முதல்வர்களும் சென்று பார்க்கவில்லை. அப்படி ஒரு முறையும் சென்று முல்லை பெரியாறு அணையை பார்க்காதவர்களுக்கு இந்த அணையை முன் வைத்து போராட்டம் நடத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், “முல்லை பெரியாறு அணையை அதிமுக ஆட்சியில் நான் 14 முறை ஆய்வு செய்திருக்கிறேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் என்னுடைய கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்காமல், அதிமுகவை குறைகூறுவது கண்டிக்கத்தக்கது. இது பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை பத்து பைசா என்பது போல் உள்ளது.” என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார். இதனைதொடர்ந்து அதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட துரைமுருகன், “ இந்த 14 தடவை முல்லை பெரியாறு அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனின் இந்தக் கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “விளம்பரத்திற்காக ஆய்வு செய்தவர்கள்தான் தேதி எல்லாம் குறித்து வைப்பார்கள். மக்களுக்கு நன்மை செய்ய உள்ள உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்வோர்கள் சென்ற தேதியை குறித்து வைக்க மாட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். “இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. எனவே, பொதுப்பணித் துறை காலண்டரில் சென்ற தேதி இருக்கிறதா என்பதை அவர்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் அப்போதும் உண்மையைச் சொல்வார்களா என்பதும் சந்தேகம்தான்.” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் எந்தெந்த ஆண்டுகளில் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்தேன் என்பது பற்றியும் அறிக்கையில் ஓபிஎஸ் விளக்கியுள்ளார்.  மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல துரைமுருகனும் - ஓபிஎஸ்ஸும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!