ரஜினிக்கு சக்தி இருந்தால் வெற்றிடத்தை நிரப்பட்டும்... ரஜினி பேட்டி குறித்து துரைமுருகன் கமெண்ட்!

By Asianet TamilFirst Published Mar 12, 2020, 10:15 PM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் இறங்கி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தது முதலே, ரஜினி விவகாரத்தில் திமுக அடக்கிவாசித்துவருகிறது. சமூக ஊடங்களில் திமுகவினரும் ரஜினி ரசிகர்களும் மோதியவண்ணம் இருந்தாலும், திமுக தலைவர்கள் ரஜினி குறித்து கருத்து தெரிவிப்பதில் மிகவும் கவனமாகவே இருந்துவருகிறார்கள்.
 

 நடிகர் ரஜினிக்கு சக்தி இருந்தால் அவர் வெற்றிடத்தை நிரப்பட்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


 நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் இறங்கி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தது முதலே, ரஜினி விவகாரத்தில் திமுக அடக்கிவாசித்துவருகிறது. சமூக ஊடங்களில் திமுகவினரும் ரஜினி ரசிகர்களும் மோதியவண்ணம் இருந்தாலும், திமுக தலைவர்கள் ரஜினி குறித்து கருத்து தெரிவிப்பதில் மிகவும் கவனமாகவே இருந்துவருகிறார்கள்.
ரஜினி குறித்த கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும்போதெல்லாம், ‘அவர் ஒரு நடிகர். கட்சி தொடங்கினால், அது பற்றி கருத்து தெரிவிக்கிறேன். நண்பர் ரஜினி புரிந்துகொண்டு பேச வேண்டும்” என்று பட்டும் படாமலேயே ஸ்டாலின் பதில் அளித்துவந்தார். இதேபோல திமுக இரண்டாம் கட்டத் தலைவர்களும் ரஜினி பற்றி பேசுவதைத் தவிர்த்தே வந்தனர்.
என்றாலும் ரஜினியின் அரசியல் வருகையால் தமிழகத்தில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அறிய திமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அறிய ஆர்வம் காட்டிவந்தார்கள். ரஜினியின் ஒவ்வோர் அசைவையும் கவனமாக உற்று நோக்கி வந்தார்கள் திமுகவினர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக, வரும் தேர்தலில் அதற்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே ரஜினி விவகாரத்தில் அமைதி காப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் தன்னுடைய முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தினார். தான் முதல்வராக விரும்பவில்லை என்றும் கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். 
இதற்கிடையே சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனிடம், ரஜினியின் பேட்டி குறித்தும், தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று அவர் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த துரைமுருகன், “சக்தி இருந்தால் அவர் வெற்றிடத்தை நிரப்பட்டும்” எனப் பதிலளித்தார்.

click me!