
திமுகவின் துணை பொது செயலாளர் துரைமுருகன் கலர்புல்லாக உள்ளார் என்றும் அவரது இளமையின் ரகசியம் என்ன? என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதைத் தொடர்ந்து அவை சிரிப்பலையால் அதிர்ந்தது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேவி குப்பம் அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதன் பேசினார். அப்போது, தனது தொகுதியை புதிய வட்டமாக மாற்ற வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ஏற்கனவே அம்மாவின் அரசு 72 வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் திமுகவின் துணை பொது செயலாளரான துரைமுருகன் பேசும்போது, 73-வது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
துரைமுருகன், அம்மா அரசு என்று கூறியதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய துரைமுருகன், வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்று கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், இன்று துரைமுருகன் கலர் ஃபுல்லாக இருக்கிறார். என்றும் 16 ஆக அவர் உள்ளார். இளமையின் ரகசியம் என்ன என்று கூறினார். துணை முதலமைச்சரின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.