"ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதா?" - ராமதாஸை விளாசிய துரைமுருகன்!!

First Published Aug 1, 2017, 3:32 PM IST
Highlights
durai murugan condemns ramadoss


பாமக நிறுவனர் ராமதாசும், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் திமுக மீது வெகுண்டு எழுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று திமுகவின் முதன்மை செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி படுகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக கொண்டு வருவதைப் பற்றி திமுகவுடன் கூட்டு வைத்திருந்தபோது பாமக ஏன் கேள்வி எழுப்பவில்லை எனவும் துரைமுருகன் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரைபேர அதிமுக அரசு.

ஆறு வருடமாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை, இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்த அதிமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, சமூக நீதியை பாட்டாளி மக்களுக்கு வழங்கிய திமுகவை விமர்சிப்பதில் ஆர்வம் காட்டி, அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களாகவே மாறி வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

ஆளும் அதிமுக அரசின் மீது திமுக குற்றம் சாட்டினால், அதற்கு பதில் எங்கிருந்து வருகிறது என்றால் தைலாபுரம் தோட்டத்திலிருந்தோ அல்லது அவரது தனயன் அன்புமணியிடம் இருந்தோதான் வருகிறது.

முதலமைச்சரோ, அதிமுக அமைச்சர்களோ குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்முன்பு திமுகவை விமர்சித்து, ஆளும் ஊழல் அதிமுக மீது மக்கள் கோபித்துக் கொண்டு விடக் கூடாது என்பதில் ராமதாஸ் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவிக்காமல் இருந்தார். 

கூட்டணியில் இருந்தபோது ராமதாஸ் இதையெல்லாம் மறந்துவிட்டு, ஊழல் அதிமுக செய்த தவறுக்கு முட்டுக்கொடுப்பதற்காக இப்படி திமுக மீது புழுதி வாரித் தூற்றும் செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. இது ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் செயலாக உள்ளது.

ராமதாசும், அன்புமணி ராமதாசும், திமுக மீது வெகுண்டு எழுவதை கைவிட்டு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருப்பதையும் நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!