
நேற்றிரவு சென்னை போயஸ் தோட்டத்தில் வருமான வரி சோதனை என்ற கொடிய நிகழ்ச்சி அரங்கேறியதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதைதொடந்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் நேற்றிரவு சென்னை போயஸ் தோட்டத்தில் வருமான வரி சோதனை என்ற கொடிய நிகழ்ச்சி அரங்கேறியதாக குறிப்பிட்டார்.
சோதனைக்கு காரணமானவர்களும் உடந்தையாக இருந்தவர்களும் எதிர்காலத்தில் அரசியலில் இருக்க மாட்டார்கள் எனவும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் ஜெயலலிதா அறையை சோதனை செய்யவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.