Pattali Makkal Katchi : பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் நாளை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பாமக தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பாமகவின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால்நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். கடந்த சில நாட்களாகவே அன்புமணி ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. அதற்கேற்றார் போல் கட்சி சார்பில் பல கூட்டங்களில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என வலியுறுத்தி பேசி வந்தார்.
அன்புமணி ராமதாஸ்
இது பாமகவினரிடையே ஒரு பக்கம் நல்ல ஆதரவை பெற்றிருந்தாலும், மற்றொரு பக்கம் கட்சிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுவது, கட்சி குறித்த செய்திகளை வெளியிடுவது என்று இருந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளார். அன்புமணி ராமதாஸுக்குப் பின் அரசியலுக்கு வந்த துரை வைகோ, பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்டோர் பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை அவர்களது கட்சியில் வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முகமாக அன்புமணி ராமதாஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் இப்போது பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அவர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளார்.இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். பாமகவை வலுவான கட்சியாக மாற்றுவதில் என்ன செய்ய போகிறார் அன்புமணி என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!
இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!