
கருத்து வேறுபாடுகளை மறந்து யாரவது விட்டுகொடுத்து சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது தோப்பு வெங்கடாசலம் சுற்று சூழல் துறை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கபட்டிருந்தபோது இவரும் தங்கி இருந்தார்.
அங்கு சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கும் இவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடைபெற்றதாக தெரிகிறது.
இதையடுத்து அமைச்சர்கள் நடத்திய ஆய்வு கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை.
பின்னர், சென்னையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவிலும் இவர் பங்கேற்காதது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை மறந்து யாரவது விட்டுகொடுத்து சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.