அசால்டாக இருக்காதிங்க மக்களே.. கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை..சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 12:56 PM IST
Highlights

கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற அவர், அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  

கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டுமென சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நோய்தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து காவல்த்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்கள் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து விழிப்புணர்வு உரையாற்றினார்.பின்னர் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு வழிமுறையாக கபசுரக் குடிநீரையும் அவர் வழங்கி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை காவல்துறையினர் கடந்த ஆண்டு கொரோனாவை தடுக்க பல்வேறு வியூகங்களை வகுத்ததாகவும், தற்போதும் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர்,  காவல்துறையினர் பொதுமக்களிடம் நெருங்கி பழகும் சூழல் அதிகம் ஏற்படுவதால் காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்ற அவர், இதுவரை 5,998 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அதனை 100% ஆக்கும் பணியிலேயே தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற அவர், அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா நோய்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 87,296 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் மீது 11,139 வழக்குகளும், வீட்டு கண்காணிப்பை மீறி செயல்பட்டவர்கள் மீது 117 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர் சென்னை காவல்துறை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக விழிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

click me!