இன்று யாராவது வேட்புமனு தாக்கல் பண்ண வந்தா வாங்காதீங்க !! கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு !!

By Selvanayagam PFirst Published Dec 6, 2019, 9:25 AM IST
Highlights

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்த நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் 6 மாவட்டங்களின் வாக்காளர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த  மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'புதிய வார்டு மறுவரையறை செய்யப்படுவதற்கு முன்னதாக தேர்தலை ஏன் அறிவித்தீர்கள். சட்டத்தை நாம் அனைவரும் பார்கிறோம், அதனால் அதனை மதித்து நடக்க வேண்டும்.

இதில் தேர்தலுக்கு குறிப்பிட்ட நேரம் என்பது முக்கியம் கிடையாது. ஆனால் அது முறையாக நடத்தப்பட வேண்டும். சட்ட விதிகளை குறுக்கு வழியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என தெரிவித்த நீதிபதிகள்,' தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. 

இருப்பினும் அது குறித்து நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு  தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

click me!