அநியாயம்- அக்கிரமத்தின் உச்சக்கட்டம்.. மக்களை கேவலப்படுத்தாதீர்கள்.. எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

By Thiraviaraj RMFirst Published Jul 8, 2020, 4:01 PM IST
Highlights

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அதிமுக அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் - மின்கட்டணச் சலுகைகளை வழங்குவது எளிது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அதிமுக அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் - மின்கட்டணச் சலுகைகளை வழங்குவது எளிது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்”- செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதலமைச்சர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது.

ஊரடங்கைப் பிறப்பித்தது அரசு. அது 'பேரிடர் நிர்வாகத்தின்' கீழ் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கை. ஆகவே அந்த காலகட்டத்தில் வேலை இல்லை; சம்பளமும் இல்லை. கூலி வேலை செய்வோர் கூட தினசரி உணவிற்கு வழியின்றி தவித்தார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பணமின்றி, வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார்கள். சுய தொழிலை நம்பியிருப்போரும் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாமல் வீட்டிற்குள்ளே ஏறக்குறைய அடைத்து வைக்கப்பட்ட நிலை. பல வகையிலும் வருமானம் ஏதுமின்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அ.தி.மு.க. அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது?

பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு, அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை? வயிற்றுப் பிழைப்பிற்காக வீதிக்கு வரும் மக்களை அடித்துத் துரத்த ஊரடங்கைப் பயன்படுத்திய அரசு, அந்த மக்களின் வாழ்வாதாரம் நொறுங்கிப் போனதை ஏன் உணர மறுக்கிறது? அந்த வாழ்வாதாரம் மற்றும் வருமான இழப்பை ஏன் பேரிடரின் ஓர் அங்கமாகக் கருதிட முதலமைச்சர் பழனிசாமி முன்வரவில்லை?

“ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தி விட்டதாக” ஒரு 'சப்பைக்கட்டு' வாதத்தை அமைச்சரும், அ.தி.மு.க. அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர, பிழைப்புத் தேடி வெளியில் செல்லத் தயாராக இருந்த மக்கள் அல்ல!

ஆகவே அரசின் உத்தரவால், முடங்கிப் போன மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்குத்தான் இருக்கிறது. 'நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று அமைச்சரும், முதலமைச்சரும் அரசு வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதிட்டு, அப்பாவி மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளுவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; குடிமக்களிடம் காட்டும் பொல்லாத செயல்!

'மின்சாரச் சட்ட விதிகளை' உயர்நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் இந்த அநியாய உத்தரவை அ.தி.மு.க. அரசு நியாயப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. அதே அரசு மின்சாரச் சட்டம், 2003-ல் உள்ள பிரிவு 61-ல் “நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்” என்று இருப்பதை ஏன் முதலமைச்சர் வசதியாக மறந்து விட்டார்?

அந்தச் சட்டத்தின்கீழ் 2006-ல் வெளியிடப்பட்ட 'கட்டணக் கொள்கை'யின் நான்கு முக்கிய நோக்கங்களில், 'நியாயமான முறையில் நுகர்வோருக்குக் கட்டணம் நிர்ணயிப்பதை உறுதிப்படுத்துவது' முதன்மையான நோக்கம்! அதையும் ஏன் முதல்வர் மறந்து விட்டார்? அ.தி.மு.க. அரசே மேற்கோள் காட்டும் மின்சாரச் சட்டம், 2003-ன்படியே மின் நுகர்வோருக்கு 'கொரோனா பேரிடரை' ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்விதத் தடையும் இல்லை. மனம்தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது!

மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில், “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்று இடம்பெற்றுள்ள திருக்குறளை, அந்த ஆணையத்திற்கும், முதலமைச்சர் பழனிசாமிக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். கொரோனா பேரிடரில் வீட்டிற்குள் முடக்கி வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, வெவ்வேறான அதிகக் கட்டணம் வசூல் செய்யும் 'வீதப்பட்டியல்' (Tariff Slab) அடிப்படையில் புதிய மின்கட்டணம் வசூல் செய்யப்படுவது இந்தத் திருக்குறளுக்குச் சற்றும் பொருத்தமானதல்ல; பேரிடர் நேரத்தில் நடுநிலையுடன் - நியாய உணர்வுடன் செயல்படும் போக்கும் அல்ல!

மாறாக, அநியாயம் மற்றும் அக்கிரமத்தின் உச்சக்கட்டம்! ஏனென்றால் 200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும், 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் இல்லங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ள 'மின்கட்டணத் தொகை' அவர்களின் இதயத்தைத் தாக்கும் 'எலெக்ட்ரிக் ஷாக்' ஆக அச்சுறுத்தி நிற்கிறது. இதை அ.தி.மு.க. அரசும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உடனடியாக கவனிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஆகவே, மின்சாரச் சட்டத்தின்கீழ் இருக்கும் 'மின் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது' என்ற அடிப்படைக் கோட்பாட்டினை மனதில் வைத்து, ஏற்கனவே பேரிடருக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தின் அடிப்படையில் மின்கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ரீடிங் எடுக்காததால், முந்தைய மாதத்தில் மின்நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தைக் கழித்து பயனாளிகள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்றாமல், அந்தப் பணத்திற்குரிய 'ரீடிங்குகளை' கழித்து, மின்கட்டணத்தை மீண்டும் கணக்கிட்டு, மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்துவது - இனிவரும் நாட்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ஆகியவற்றிற்கும் 'மானியம்' அளிக்கவோ அல்லது நீண்டகாலத் தவணை முறையில் செலுத்தவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சாரச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அமைப்பு என்பதாலும், இது கொரோனா பேரிடர் காலம் என்பதாலும், கட்டணச் சலுகையை மின் நுகர்வோருக்குக் கொடுப்பதில் அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும் இயலாது என்றால், கொரோனா காலத்திற்குரிய - அதாவது 31.7.2020 வரையிலான ஊரடங்குக் காலத்திற்குக் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல்- வீட்டுப் பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்

click me!