பாமகவின் கூட்டணி பற்றி ஊடகங்கள் பேசுவதா? ராமதாஸ் கோபம்

By Asianet TamilFirst Published Jan 27, 2019, 4:33 PM IST
Highlights

பாமக தேர்தல் கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக தேர்தல் கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிக்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் வெளியிடப்படும். அதன்பிறகுதான் தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் தீவிரமடையும். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ம.க. கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என்று பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ளன. இந்த விஷயத்தில் அவசரப்படவோ பதற்றப்படவோ தேவை இல்லை.

ஆனால், தமிழகத்திலுள்ள ஊடகங்கள் கூட்டணி குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை கற்பனையாக வெளியிட்டுவருகின்றன. என்னைத் தவிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் கூட்டணி பற்றி யூகங்களின் அடிப்படையிலே ஊடகங்கள் வினா எழுப்புகின்றன. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது கூட்டணி குறித்து எந்தத் தகவலை, யார், எப்படி கூற முடியும் என்பதை யாரும் சிந்திக்கவில்லை.

கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் முடிவெடுக்கத்தான் போகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளையும் மக்களையும் பாதுகாக்க எதை செய்ய வேண்டுமோ, அதை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் செய்யும். அதற்கு முன்பாகவே ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுவதும் அவற்றின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதும் எந்த வகையிலும் நியாயமில்லை; அறமில்லை.

சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணியிடம் நேர்காணல் கண்ட இளம் செய்தியாளர் ஒருவர், ‘‘கூட்டணி தொடர்பாக உங்களுக்கும், உங்கள் கட்சியின் நிறுவனருக்கும் இடையே மோதல் நிலவுகிறதாமே?’’ என்று வினா எழுப்பியுள்ளார். இதை அறியாமையின் வெளிப்பாடா? அல்லது வன்மமா? என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஊடகங்களின் குதர்க்கமான, குயுக்தியான தாக்குதல்கள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியை முன்வைத்தே ஏவப்படுவதுதான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தப் பிறகும் கூட, ‘‘இந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. கூறவில்லை.... அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை... அதனால் அந்தக் கட்சியுடன்தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும்’’ என்று ஊடகங்களே கனவில் யூகித்து, கற்பனையில் விவாதித்து, முடிவெடுக்கப்படாத ஒன்றை முடிவாகச் சொல்கின்றன.

ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். ‘‘ ஊடக நண்பர்களே, எப்போதும் நான்காவது தூணாக செயல்படுங்கள். ஒருபோதும் நெறி பிறழ்ந்து செயல்படாதீர்கள்!’’

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!