
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜி, இன்று 3-வது முறையாக ஆஜராகி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று விசாரணை ஆணையம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன், பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வேட்புமனுவுடன் வழங்கப்பட்ட ஆவணத்தில் இருந்த கைரேகை ஜெயலலிதாவுடையதுதானா என்பதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கைரேகை பதிவின்போது உடன் இருந்ததாக தெரிவித்த அரசு மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையம் இரு முறை அழைத்து விசாரித்தது. அதில் மருத்துவர் பாலாஜி கூறிய தகவல்களை அறிக்கையாக அளிக்குமாறு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் மருத்துவர் பாலாஜி இன்று 3வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். எழுத்துப்பூர்வ அறிக்கை மற்றும் ஆவணங்களை மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்ய உள்ளார்.