மருத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை..!! மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2020, 7:05 PM IST
Highlights

மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் பற்றாக் குறையை போக்கிட உடனே பணிநியமனம் செய்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் பற்றாக் குறையை போக்கிட உடனே பணிநியமனம் செய்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா முழுவதும்  இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், ஏராளமான மருத்துவத் துறைப் பணியாளர்களும் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், பல மருத்துவத்துறைப் பணியாளர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கொரோனாத் தொற்றும், இறப்பும்  அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கூடுகிறது. நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் படுக்கைகளை தமிழக அரசு அதிகரித்து வருகிறது. இதுவரவேற்புக்குரியது.

கொரோனாக் கால அவரச தேவைக்காக உடனடியாக மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஆய்வக, எக்ஸ் ரே, ஈ.சி.ஜி, நுட்பநர்கள், சி.டி ஸ்கேன், டயாலிசிஸ், மயக்கவியல் மற்றும் ,அவசர  சேவை நுட்பநர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற மருத்துவத் துறைப் பணியாளர்களை சில தனியார் அமைப்புகள்  மூலம், ‘வெளி கொணர்தல்’ முறையில் நியமிக்க 12.6.2020 அன்று  தமிழக அரசு ஆணையிட்டது. அதில் முறைகேடுகள் ஏற்பட்டன. அதை சமூக சமத்துவத்திறகான டாக்டர்கள் சங்கம் கண்டனம் செய்ததது. அதைத் தொடர்ந்து, 17.6.2020 அன்றே அப்பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த நிறுத்திவைக்கப்பட்ட பணிநியமனங்களை,  மருத்துவப் பணியாளர்கள் பணிநியமனத்திற்காகவே உள்ள, தமிழக அரசு மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன ஆணையம் (Medical Recruitment Board) மூலம் உடனடியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை  கூட   முறையாக பணிநியமனம்  செய்யப்படவில்லை. இந்த காலதாமதத்தால் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்கைகுறை ஏற்பட்டுள்ளது. இதனால், கொரானாத் தடுப்புப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரானா நோயர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

தடுப்புப் பணியில் உள்ள ஊழியர்கள் வேலைப் பலுவால் உடல் மற்றும் உளரீதியான உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே , உடனடியாக , மருத்துவப் பணியாளர்களை, மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன ஆணையம் மூலம் பணிநியமனம் செய்திட வேண்டும். பல இடங்களில் பல்வேறு தனியார் அமைப்புக்கள் மருத்துவப் பணியில் சேர விருப்பமுள்ளவர்களையும், ஏற்கனவே தேர்வு எழுதியுள்ளவர்களையும் தொடர்புக்கொண்டு பணி நியமனங்களுக்கான அழைப்பு விடுப்பதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு தனியார் அமைப்பு பணிநியமனங்களை செய்து வருகின்றது. இதில் பல முறைகேடுகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
 எனவே, தனியார் அமைப்புகள் மூலம் பணி நியமனங்கள் செய்வதை முழுமையாக கைவிட வேண்டும்.  மருத்துவப் படுக்கைகளுக்கேற்ப, மருத்துவர்கள், மருத்துவ ஆய்வக நுட்பநர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களின் , எண்ணிக்கையை அரசு அதிகரிக்கவில்லை. எனவே, உடனடியாக மருத்துவர்கள், ஆய்வக நுட்பநர் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களின், எண்ணிக்கையை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உயர்த்த வேண்டும். 

108 அவசர ஊர்தி ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால், அவர்களுக்கு ரூ 2 லட்சம் வழங்கிட வேண்டும். துரதிருஷ்டவசமாக அவர்கள், கொரோனா தடுப்புப் பணியின்போது இறக்க நேர்ந்தால், அவர்களது குடும்பத்தினருக்கும் ரூ 50 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும். கொரோனா பரிசோதனையில் கொரோனா உறுதியானால் தான் ரூ 50 லட்சம் வழங்கப்படும் என்பதை மாற்ற வேண்டும். கொரோனா பரிசோதனைகள் பல நேரங்களில் ,பல காரணங்களால் ,கொரோனா இல்லை என தவறாக முடிவு வரவும் வாய்ப்புண்டு. எனவே , கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உடல் நல பாதிப்புக்குள்ளாகி இறந்தாலே இந்த இழப்பீட்டு தொகையை வழங்கிட வேண்டும்.
 தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு ஊதியத்தை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. 
 

click me!