#UnmaskingChina:கல்வான் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை சீனாவை எச்சரித்த இந்தியா..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2020, 2:26 PM IST
Highlights

இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இரு நாட்டுப் படைகளும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு படுகளை பின்வாங்கி உள்ள நிலையில் மீண்டும் இந்தியா சீனாவின் கருத்தை நிராகரித்துள்ளது. 

இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  இருந்து இரு நாட்டுப் படைகளும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு படுகளை பின்வாங்கி உள்ள நிலையில் மீண்டும் இந்தியா சீனாவின் கருத்தை நிராகரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் முழு இறையாண்மை இருப்பதாக தெரிவித்த சீனாவின் கூற்றை இந்தியா மீண்டும் மறுதலித்துள்ளதுடன், இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும் உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என சீனாவுக்கு இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியில் இருந்து தங்களது படைகளை  இரு நாடுகளும் படைகளை பின்நேக்கி நகர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாயிண்ட் 15ல் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய-சீன படைகள்  திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி  நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். 

அதேபோல் சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாடு ஒப்புக்கொண்டது ஆனால் அதற்கான முழு விவரங்களையும் அந்நாடு வெளியிடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் தங்களது படைகளை  எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் குவித்தன. அதே போல் இந்திய எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் சீனா, ராணுவ முகாம்களையும் ஹெலிபேடு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் உருவாக்கியது. இந்தியாவும் பதிலுக்கு படைகளை எல்லையை நோக்கி  நகர்த்தியதுடன், விமானப் படைத்தளத்தில் போர் விமானங்களை தயார்நிலையில் வைத்தது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்ததையடுத்து எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதற்கிடையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடந்த பகுதியிலிருந்து இருநாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற ஒப்புக்கொண்டன. 

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், பேட்ரோலிங் பாயிண்ட்-15 இல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கி உள்ளன. தற்போது, சீனா அங்கு ஏற்கனவே  உருவாக்கிய கூடாரங்கள் மற்றும் ஹெலிபேட் போன்ற கட்டமைப்புகளும் மற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள  விரல் 4, ஹாட் ஸ்ப்ரிங்ஸ்,  கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்ப பெற்றிருப்பதாகவும், அங்கிருந்து தனது வாகனங்கள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை முற்றிலும் அகற்றியிருப்பதாகவும் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாடுகளைம் படைகளை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக  எல்லையில் நீடித்து வந்த  பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது இந்நிலையில் இரு நாட்டும் எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை முழுமையாக தனிப்பதற்காக லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

அதில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. அதற்கு அடுத்த கூட்டத்தில் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள், துப்பாக்கிகள், டாங்கிகள், ஆயுதங்கள், ராக்கெட் ஏவுகணைகள், போர் ஜெட் விமானங்கள் போன்றவற்றை எல்லையிலிருந்து அகற்றுவதற்கான நேரம்- வரிசை அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 45,000 வீரர்களை பின்வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஆன்லைனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, அதில் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா எல்லையில்  அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை கண்டிப்பாக மதிக்க வேண்டும், அதை சீனா நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி-யி உடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொலைபேசி உரையாடலின் போது இந்தியாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். 

கல்வான் பள்ளத்தாக்கு பரப்பளவு எல்லை பேச்சு வார்த்தைகளுக்கான சிறப்பு  பிரதிநிதிகளான, தோவால் மற்றும் வாங்-யி நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இரு நாடுகளின் படைகளும் கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து துருப்புகளை வெளியேற்ற தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் இந்திய துருப்புகள் எல்லை நிர்வாகத்தை மிக பொறுப்பான அணுகுமுறையுடன் கையாண்டு வருகின்றன, அதேநேரத்தில் இந்திய இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் எங்கள் படைகள் ஆழ்ந்த உறுதி பூண்டுள்ளன என்பதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சீனாவிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீவாஸ்தவா கூறினார். அதே நேரத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோரியது மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், எல்லைப்பகுதியில் அமைதி மற்றும் அமைதிக்கான அடிப்படைகளை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் அமைதியை பராமரிப்பதும் அவசியம் மற்றும் உரையாடலின் மூலம் வேறுபாடுகளை தீர்ப்பது குறித்தும் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவில் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் நாங்கள் கடுமையாகவும், தெளிவாகவும் உள்ளது என ஸ்ரீ வாஸ்தவா கூறினார்.
 

click me!