புது நாடாளுமன்றம் ஏன் கட்றோம் தெரியுமா..? விலாவரியாக விளக்கிய தமிழக பாஜக..!

By Asianet TamilFirst Published May 17, 2021, 9:28 AM IST
Highlights

புதிய நாடாளுமன்றம் கட்டும் விவகாரத்தில், சர்வதேச அரங்கில் நம் நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்வது நல்லது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலகட்டத்தில் 20,000 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? என்று எதிர்க்கட்சியினர் பலர் கேட்கிறார்கள். 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் மும்பை தலைமை செயலகமான மந்திராலயாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தையடுத்து, ஜூலை 13 அன்று நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் அவர்கள் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு, வேறொரு கட்டிடத்தை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை குழு ஒன்றை நியமித்தார்.
1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நம் நாடாளுமன்ற கட்டிடம், தற்போதைய நிலையில் 6.2 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தால் தாங்காது என்று ஐஐடி (ரூர்கி) தெளிவு பட கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கட்டிடத்தின் உறுதிக்கு தடையில்லா சான்றை டெல்லி தீயணைப்பு துறை கொடுக்க மறுத்தது. தினமும் நாடாளுமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்சமயம், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட சுமார் 6500 பேர் பணிபுரிந்து வருகிற நிலையில், எம்பிக்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என தினமும் குறைந்தது 10000 பேர்  நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார்கள். 
இவ்வளவு பாரத்தை 94 வருடங்களான கட்டிடம் தாங்காது என்பது தெளிவான உண்மை. மேலும், அதிகரித்து வரும் குளிர்சாதன வசதிகள், மின் இணைப்புகள், சமையலறைகள்,கழிப்பறைகள் உட்பட பல்வேறு கூடுதல் கட்டுமானங்கள் இந்த கட்டிடத்தின் இயல்பான  வடிவமைப்பை, ஸ்திரத்தன்மையை வலுவிழக்க செய்துவிட்டன. மேலும் பாதுகாப்பும் கடும் நெருக்கடியை தருகிறது. 2009 ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்தை புராதன சின்னமாக அறிவித்த நிலையில், இதை புனரமைப்பது, விரிவாக்குவது எனபதெல்லாம் இனி முடியாது. அப்படியே செய்தாலும் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் தாங்காது என்பதே உண்மை.
இதனடிப்படையில், புதிய நாடாளுமன்றம் மற்றும் தலைமை  அரசு மையத்தை அமைப்பது குறித்து 2016ம் ஆண்டே அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், வல்லுனர்களையும் கலந்தாலோசித்ததன் பேரில், இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டான  2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை முழுமையாக்குவதே தற்போதைய திட்டம். அதற்காக ரூபாய்.971 கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. மேலும், 2026க்குள், மைய அரசின் செயலகம், துணை ஜனாதிபதியின் இல்லம் மற்றும் அலுவலகம், பிரதம மந்திரியின் இல்லம் மற்றும் அலுவலகம் உட்பட 51 அமைச்சரவைகளின் அலுவலகங்களும் இந்த மத்திய அரசின் தலைமை நிர்வாக மையத்தில் (Central Vista) இடம்பெறும் என்பதாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சரவை அலுவலகங்கள் டெல்லியின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமையும் போது, ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, மக்கள் பணிகள் வேகமாக நடைபெறும் என்பதால், இது நாள் வரை அந்தந்த அமைச்சரவை அலுவலகங்களுக்கு வருடந்தோறும் செலுத்திக்கொண்டிருந்த சுமார் ரூ. ஆயிரம் கோடி வாடகை சேமிக்கப்படும். மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம் ஒரே இடத்தில் அமைவதால் போக்குவரத்து நெரிசல் குறையும். பாதுகாப்பு மேலும் பலப்படும்.
1951ம் ஆண்டு 36 கோடியாக இருந்த மக்கள் தொகை இன்று 70 ஆண்டுகளில் 100 கோடி அதிகரித்து 136 கோடியாக உள்ள நிலையில், தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1971 மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயரும். அமையப்போகிற  நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒரே நேரத்தில் இரு அவைகளை சார்ந்த 1224 உறுப்பினர்கள் அமரும் வகையில்  வடிவமைக்கப்படும்.
மொத்தமே தற்போது 971 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு இந்த பணத்தை செலவிடலாம் என்று எதிர்கட்சிகள் சொல்வது விந்தையிலும் விந்தை. கொரோனா தொற்றை தடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நிதி இல்லை என்று மத்திய அரசு கூறவேயில்லை. தடுப்பூசி கொள்முதலுக்கு 35,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில், தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதில் பல நூற்றுக்கணக்கான கோடிகளை செலவு செய்து மக்களை அடைய செய்கிறது மத்திய அரசு. சுகாதார நல கட்டமைப்புகளை பெருக்க செய்ய 3 லட்சம் கோடி வரை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், ஜனநாயகத்தை பறைசாற்றும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு கொரோனா காலகட்டத்தில் பாஜக அரசு மீது குறை சொல்லி மலிவு அரசியலை செய்வது வெட்கக்கேடு. சர்வதேச அரங்கில் நம் நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்வது நல்லது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை போற்றுவதோடு ஜனநாயகத்திற்கு  பெருமை சேர்க்கும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

click me!