இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாரயணன், மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பும் விடிய விடிய காரசார வாதம் நடத்தினர். இருதரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். ஆனால், 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் பேட்டியளிக்கையில்;- இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும், அதில் ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் ஜெயலலிதா. இந்தத்தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு எழுச்சி மிகுந்த தீர்ப்பாக இருக்கிறது. ஒற்றைத்தலைமை விவகாரம் ஒரு தொண்டனாக மிகுந்த வருத்தம் அளித்து இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார் என்றார்.