
பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் எந்த காலத்திலும் கூறக்கூடாது என்றும் அப்படி கூறினால் அது மிக தவறு என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள்! சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என்று
பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சென்னை, ராயப்பேட்டை மேம்பாலத்தில் எச்.ராஜாவின் உருவப்படத்தை கட்டி தொடங்கவிட்டுள்ளனர்.
எச்.ராஜா பதிவு குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எச்.ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கூறும்போது, தன்மானமுள்ள மனிதன் என்றால் காவல்துறை பாதுகாப்பு இன்றி பொது வெளியில் எச்,ராஜா வர முடியுமா? என சவால் விடுத்திருந்தார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பதிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எச்.ராஜாவை கலாய்க்கும் வகையில் நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், "இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னால், குழந்தைகளுக்கு பிடிக்காது" என்று பதிவிட்டுள்ளார். எச்.ராஜாவின் நடவடிக்கைகளால், இனி குழந்தைகளுக்கு ராஜா கதை சொன்னால் பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. குறித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சென்னை, சென்ட்ரல் அருகே மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், எச்.ராஜாவுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜெயக்குமார், எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் பெண்ணின் மானம் காக்கப்பட வேண்டும். பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் எந்த காலத்திலும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அது மிக தவறு என்றார். இதுபோன்ற நிலையில், அந்த பெண், புகார் அளிக்கலாம். அவதூறு வழக்கு போடலாம். கிரிமினல் வழக்கே போடலாம். பாதிப்புக்குள்ளானவர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இது குறித்து கனிமொழிக்கு ஆதரவாக ஜெயக்குமார் பேசியதாக எதையும் போட்டு விடாதீர்கள் என்றும் அப்போது அவர் பேசினார்.