அன்புமணி ராமதாஸ் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வறண்ட பகுதிகளை பார்வையிட வர வேண்டும். அங்கு இருக்கும் ஏழை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன சங்கம் அமைத்து செயல்படுகின்ற செயல்பாடுகளை குறை கூறக்கூடாது.
டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்கு மண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அன்புமணி பேச வேண்டும் என ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடந்த 10-ம் தேதி கொங்கு மண்டல நீரேற்று பாசன விவசாய சங்கத்தை சார்ந்தவர்களை குற்றம்சாட்டி அறிக்கை விட்டு இருப்பதை கண்டு வேதனை அடைந்தேன். ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட விவசாய நிலங்களுடைய வறட்சி தெரியாமல் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்து கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
காவிரியில் ஓடுகின்ற தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு தான் என்ற தொனியில் அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கின்றார். 1500 அடி ஆழ்துளை கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத அவல நிலை கொங்கு மண்டலம் முழுவதும் இருக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன சங்கங்களை ஏற்படுத்தி சொந்த செலவிலேயே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது ஏற்க கூடியது அல்ல.
பல கிலோமீட்டர் தொலைவிற்கு காவிரி ஓரத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதன் மூலமாக குறிப்பிட்ட விவசாய நிலங்கள் மட்டும் பயன் அடைவதை தாண்டி அந்த பகுதியில் நிலத்தடி நீர் மேம்படுகிறது. அதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் குடிதண்ணீரை பெறுகின்றனர். அந்த உண்மைகளை எல்லாம் அறியாமல் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை குற்றம்சாட்டி பேசியிருப்பது ஏற்புடையதல்ல.
வருடத்தில் 8 மாதங்கள் தான் காவிரி ஓரத்தில் தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அரசு அனுமதியளிக்கிறது. காவிரியில் குறைந்த தண்ணீர் ஓடும் 4 மாதங்கள் அனுமதிப்பது இல்லை. உபரியாக கடலுக்கு செல்லும் நீரை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தங்கள் வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச எடுத்துச் செல்வதை குறை கூறக்கூடாது. இதில் பலன் அடைகின்ற விவசாயிகள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட சிறு விவசாயிகள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கே தண்ணீர் கொடுக்க வேண்டிய கடமை இருந்தாலும் விவசாயிகள் தாங்களாகவே அரசாங்கத்தின் வேலையை செய்து கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வறண்ட பகுதிகளை பார்வையிட வர வேண்டும். அங்கு இருக்கும் ஏழை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன சங்கம் அமைத்து செயல்படுகின்ற செயல்பாடுகளை குறை கூறக்கூடாது. டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்குமண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயத்தை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கியும், சொந்த பணத்தை செலவு செய்தும் நீரேற்று பாசனம் நிறைவேற்றுகின்ற விவசாயிகளை அரசும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.