திமுக ஆட்சிக்கு வரவே வராது... அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு கணிப்பு!

By Asianet TamilFirst Published Oct 14, 2019, 10:54 PM IST
Highlights

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட சென்னையிலிருந்து வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. 

கடல் நீர் எப்போது வற்றுவது? எப்போது கருவாடு திண்பது? என்று சொல்வதை போலத்தான் திமுக ஆட்சிக்கு வரும் என்று சொல்வதும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து பேசுவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் நெல்லையில் தங்கியுள்ளார். களக்காடு அருகே உள்ள கோதைசேரியில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


 “நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட சென்னையிலிருந்து வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், அதிமுகவில் உழைக்கும் வர்க்கத்தினர், பாட்டாளி வர்க்கத்தினர், கட்சி கொடி கட்டும் கந்தனுக்கும் அங்கீகாரம் கொடுக்கிறோம்.  காங்கிரஸில் ஓடாய் தேய்ந்த குமரி அனந்தனுக்குக்கூட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், அவருடைய அன்பு மகள் தமிழிசைக்கு பாஜக நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளது. 
வைகோ எப்போதும் மாறி மாறி பேசக்கூடியவர். இதற்கு முன்பு திமுக பற்றி அவர் வைத்த விமர்சனங்கள் எல்லாம் கடுமையானவை. எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் கருணாநிதி வீட்டுக் குடும்பப் பெண்கள் வெள்ளை நிற சேலை அணிய வேண்டி வரும் என்று கூறியவர் வைகோ. அதை இல்லை என்று ஸ்டாலின், வைகோவால் மறுக்க முடியுமா? 
சீன அதிபர் சந்திப்பின்போது வேஷ்டி சட்டை அணிந்து வந்து தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஆ. ராசா, கனிமொழி போன்றவர்களால் தமிழனுக்கு தலைகுனிவுதான் ஏற்பட்டதுதான் மிச்சம். முதல்வர் வெளிநாடு சென்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட நாங்கள் தயார். லிஸ்ட் கொடுத்தால் பாராட்டு விழா நடத்த மு.க. ஸ்டாலின் தயாரா? 
உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் சென்று தடை வாங்கியவர் மு.க. ஸ்டாலின்தான். 2021-ம் ஆண்டில் மட்டுமல்ல, இனி எப்போதுமே திமுக ஆட்சிக்கு வரவே வராது. கடல் நீர் எப்போது வற்றுவது? எப்போது கருவாடு திண்பது? என்று சொல்வதை போலத்தான் திமுக ஆட்சிக்கு வரும் என்று சொல்வதும்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

click me!