பாஜகவுக்கு கைகொடுக்காத வெற்றிவேல்; வீரவேல் முழக்கம்.. அறுபடை வீடுகள் அமைந்த தொகுதிகளை அள்ளிய திமுக..!

By Asianet TamilFirst Published May 5, 2021, 9:46 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கையில் எடுத்த வெற்றி வேல்; வீர வேல் என்ற முழுக்கம் அக்கட்சிக்கு கை கொடுக்காமல் போனதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
 

கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தி விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக, அந்த விவகாரத்தை கையில் எடுத்தது. இந்தக் கூட்டத்தின் பின்னணியில்  திக, திமுக இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த பாஜக, வீடுகளில் வேல் பூஜை, வேல் யாத்திரை, பழநிக்கு பாதயாத்திரை என பல்வேறு உத்திகளைக் கையாண்டது. இதற்காக தமிழக பாஜக, ‘வெற்றி வேல்; வீரவேல்’ என்ற கோஷத்தையும் முன்னெடுத்தது. தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடிகூட அந்தக் கோஷத்தை எழுப்பிதான் பிரசாரத்தையே தொடங்கினார்.
இந்த விவகாரம், தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாஜக நம்பியது. ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த விவகாரம் பாஜகவுக்கு சுத்தமாக கைகொடுக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. அறுபடை வீடு அமைந்துள்ள 6 தொகுதிகளில் பாஜக ஒன்றில்கூட போட்டியிடவில்லை. இந்தத் தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட்டது. தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுகவே கைப்பற்றியுள்ளது. 
திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. திருத்தணி, பழநி, திருச்செந்தூர், கும்பகோணம் (சுவாமிமலை அமைந்துள்ள தொகுதி), மதுரை கிழக்கு (பழமுதிர்சோலை அமைந்துள்ள தொகுதி) ஆகியவற்றை திமுகவே கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் தமிழ்க் கடவுள் முருகனை முன்னிலைப்படுத்தி பாஜக கையாண்ட உத்தி பலனை கொடுக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 
   

click me!