எடப்பாடியின் அசுர எழுச்சி!! நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பின்வாங்கிய திமுக!

By sathish kFirst Published May 27, 2019, 5:41 PM IST
Highlights

இடைத்தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்கிற முடிவில் இருந்து திமுக பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்கிற முடிவில் இருந்து திமுக பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை மாற்றுவோம் என்று சூளுரைத்து வந்தார் முக ஸ்டாலின். ஆனால் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 13 மட்டுமே திமுக வெல்ல முடிந்தது. வெறும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது. இதனால் தற்போதைய சூழலில் சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு பெரிய அளவில் எந்த சிக்கலும் இல்லை.

அதேசமயம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எடப்பாடி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த முடியும். ஆனால் அப்படியும் கூட ஆட்சியை கவிழ்க்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தனது எம்எல்ஏ பதவியை தற்போது ராஜினாமா செய்யவுள்ளார். இதனால் ஸ்டாலின் தலைமையிலான எதிர்க் கட்சிகளின் பலம் சட்டப்பேரவையில் குறைகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் எடப்பாடி அரசு நிச்சயம் தப்பித்து விடும் என்று திமுக உறுதியுடன் நம்புகிறது. மேலும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விட்டால் அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவர முடியாது. எனவே தற்போதைக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்கிற முடிவை கைவிட்டு எடப்பாடி அரசு பயணிக்கும் போக்கை பார்த்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம் என்பதால் தற்போது முதல் எடப்பாடி தரப்பும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் இடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தொடர்பு கொண்டு ஆட்சி தொடர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பேசுவதாகவும் அவர்களின் தேவையை கேட்டுக்கொள்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.

click me!