ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றி.. பதவிகளை அள்ளிய திமுக.. அரண்டு கிடக்கும் அதிமுக.!

By Asianet TamilFirst Published Oct 13, 2021, 7:35 AM IST
Highlights

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
 

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. காலை 7.15 நிலவரப்படி பெரும்பாலான இடங்களை திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. 
கட்சிகள் சின்னத்தில் போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 137 இடங்களின் நிலவரம் தெரிய வந்துள்ளது. இதில் திமுக கூட்டணி 133 இடங்களில் முன்னணி அல்லது வெற்றி பெற்றுள்ளன. பாமக ஓரிடத்திலும் அதிமுக கூட்டணி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன அல்லது முன்னணியில் உள்ளன. 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 1208 பதவிகளுக்கான நிலவரங்கள் தெரிவ வந்துள்ளன. இதன்படி திமுக கூட்டணி 891 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி 181 இடங்களில் மட்டுமே முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளது. பாமக 33, அமமுக 5, தேமுதிக 1, மற்றவர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.


இன்னும் நூறுக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் தெரிய வேண்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் திமுக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.
 

click me!