சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகதான் ஜெயிக்கும்... தாறுமாறாக கணித்த வைகோ...!

By Asianet TamilFirst Published Feb 15, 2021, 9:52 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

கோவையில் மதிமுக கட்சி நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசுகையில், “சோதனையான காலத்தில் ரூ.80 லட்சத்து 88 ஆயிரம் நிதி திரட்டி கட்சிக்கு தரப்பட்டுள்ளது. நிதி குவிந்திருப்பதால், அரசியல் கட்சிகள் நிதி கேட்டு செல்லக்கூடிய நிலைமையில்கூட இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நிதி கேட்டு செல்லவில்லை. மதிமுக மட்டுமே நிதி திரட்டிக் கொண்டிருக்கிறது. மக்கள் முகம் சுளிக்காமல் நமக்கு இயன்ற தொகையை தருகிறார்களே, அதுவே மக்களிடத்தில் மதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.


தமிழகத்தின் நன்மைக்காகவும் வளத்துக்காகவும் வாழ்வாதாரங்களை காக்கவும் இழந்தவர்களின் வாழ்வாதாரங்களை மீட்கவும் பாடுபடும் கட்சி மதிமுக மட்டுமே. பதவிதான் எனக்கு முக்கியம் என்றால், கேபினட் அமைச்சர் பதவி தருகிறேன் எனக் கூறியபோதே நான் அதை ஏற்றிருப்பேன். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அப்போது தொண்டர்களைதான் வேட்பாளர்களாக நிறுத்தினேன். 
திமுக தலைமையிலான கூட்டணியில் செயல்படுவது என நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் முடிவெடுத்தோம். திராவிட இயக்கத்தைக் காக்க, சனாதான இந்துத்துவ சக்திகளின் படையெடுப்பை தடுக்க, பெரியார், அண்ணா ஆகியோரின் லட்சியங்களைக் காப்பற்ற திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பட்டோம். கொள்கை, லட்சியம் என்ற முறையில் நாம் செயல்பட வேண்டுமே தவிர, விமர்சனங்களுக்கு ஆளாகிற ஒரு நிலைப்பாட்டை இனி எடுக்க முடியாது என்ற வகையில், இக்கூட்டணியில் நாம் தொடர்கிறோம்.


வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது. இத்தேர்தல் முடிந்தவுடன் சில நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து தலைமை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தக்கூடிய உறுதியை நாம் மேற்கொள்வோம்” என்று வைகோ பேசினார்.
 

click me!