
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுக, அதிமுக, தினகரன் என ஒவ்வொரு தரப்பும் தங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இரட்டை இலையை இழந்து கட்சி தங்களுக்கு இல்லை என்ற நிலையில், தனித்துவிடப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தீயாய் வேலை செய்துவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களும் அதிமுக தொண்டர்களும் தற்போதைய அதிமுக அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க துடிக்கிறார் தினகரன்.
அதேபோல், இரட்டை இலையை மீட்ட சந்தோஷத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுகவும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு நற்பெயரும் வரவேற்பும் இருக்கிறது என்பதை நிரூபிக்க போராடுகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தும் ஆட்சியைக் கலைத்துவிட்டு திமுகவால் ஆட்சிக் கட்டிலில் அமரமுடியவில்லை என்ற குரல் ஆங்காங்கே எழுந்தது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை பயன்படுத்தி ஆட்சிக்கு வர விரும்பவில்லை. மக்களிடத்தில் அதிமுக அரசின் நிர்வாக தோல்வியை எடுத்துரைத்து ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது. அதனடிப்படையில், அதிமுக அரசின் தவறுகளை மக்களிடத்தில் விளக்கி ஆளும் கட்சியை இடைத்தேர்தலில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.
இப்படி, ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு குறிக்கோளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, திமுக கூட்டணிக்கு 33% ஆதரவும், தினகரனுக்கு 28% ஆதரவும் அதிமுகவுக்கு 26% ஆதரவும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி, திமுகவுக்கே அதிகமானோர் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.