கூட்டணி கட்சிகளின் குழப்பத்தால் கோட்டை விடும் திமுக... அதிர்ச்சியில் அறிவாலயம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2021, 12:42 PM IST
Highlights

இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதறடிப்பவராக பார்க்கப்படும் அசாதுதின் ஓவைசி, தமிழக  சட்டசபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஒருபுறம் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறன. இன்னொரு புறம் சீனியர்களுக்கு எதிராக கட்சியில் நிலவும் கோஷ்டிபூசல் போன்ற சமாச்சாரங்களினால் அறிவாலயம் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.
 
இது தொடர்பாக அறிவாலயத்துக்கு நெருக்கமானவர் கொட்டித் தீர்த்து வருகின்றனர். "திமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் துரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி என குறுநில மன்னர்கள் போன்று சீனியர்களே கோலோச்சுகின்றனர். தேர்தலில் அவர்களே நிற்பது மட்டுமல்லாமல், மற்ற தொகுதிகளிலும் தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.கட்சி ஜெயித்தால் அமைச்சர்கள் ஆவதும் அவர்கள்தான். இதனால் மாவட்ட திமுகவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என ஆகி விடுகிறது. நாங்களெல்லாம் போஸ்டர் ஒட்டவும், பிரசாரம் செய்யவும் களப்பணியை மட்டுமே செய்து கையைச் சூப்பிக் கொண்டிருக்கிறோம்.
 
ஆனால், இந்த முறை அப்படி ஆகிவிடக் கூடாது. அதனால்தான், பல மாதங்களுக்கு முன்னரே, 'சீனியர்களுக்கு இந்த முறை சீட் கொடுக்கக் கூடாது' எனக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வந்தோம். அதை தலைமையும் 'சரி' எனத் தலையாட்டி இருந்தது. ஆனால், தற்போது விருப்ப மனுக்களை வாங்கியவர்களையும், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலுக்கான அழைப்பு பட்டியலையும் பார்த்தால், எதுவும் மாறவில்லை எனத் திட்டவட்டமாக தெரிகிறது. அதே முகங்கள். அதே ஆட்கள்.

இதை நிரூபிப்பது போன்று, “கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பான். நாளை உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பான்" எனப் பொதுச் செயலாளர் பதவியில் உள்ள துரைமுருகன் பேசி உள்ளார். துரைமுருகனுக்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்தில் இருக்கும் எதிர்ப்பைத் தெரிந்துமே இப்படி ஆசைப்படுகிறார்.

 
 
இவருக்கு 82 வயசாச்சு. பல முறை அமைச்சர் பதவியை அனுபவிச்சிட்டார். இப்போ கட்சியிலும் பொதுச் செயலாளர் பதவி. இவர் மகனையும் எம்.பி ஆக்கிட்டார். ஆனால், இன்னும் இவருக்கு ஆசை அடங்கவில்லை. இதையேதான் பொன்முடி, கே.என். நேரு போன்ற மூத்த தலைவர்களும் செய்கிறார்கள். ஆனால், இந்த முறை நாங்க ஏமாற தயாரா இல்லை. நாங்க கட்சிக்காக எந்த வேலையும் செய்ய மாட்டோம். அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்" எனக் கோப வார்த்தைகளைக் கொட்டினார்கள்.
 
திமுகவில் எழுந்துள்ள உட்கட்சிப் பூசல் ஒருபக்கம் தலைவலி என்றால், இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளின் குடைச்சல். தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தை அத்தனை சுமுகமாக நடக்கவில்லை. "காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தும், திமுக நம்மை மதிப்பதில்லை..." என்ற கோபக் குரல்கள் சத்தியமூர்த்தி பவனில் வெளிப்பட்டுள்ளன.
 
இது குறித்து கதர்சட்டைப் புள்ளி ஒருவரிடம் பேசியபோது, "சீட் ஒதுக்கீட்டில் வருத்தம் இருந்தாலும் உடன்பாடு கையெழுத்தாகி விடும். ஆனால் தொண்டர்கள் முழு மனதுடன் வேலை பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். இதனால், எங்களுக்கு மட்டுமல்ல, திமுகவுக்குமே வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். இதே எண்ண ஓட்டம்தான் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடையேயும் காணப்படுகிறது.
 
இன்னொரு புறம் இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதறடிப்பவராக பார்க்கப்படும் அசாதுதின் ஓவைசி, தமிழக  சட்டசபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அப்படி போட்டியிட்டால், திமுக தங்களுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதாக அதிருப்தியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் ஓவைசி கட்சியுடன் கைகோர்த்து விடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அது நிச்சயம் திமுகவுக்குத்தான் கேடாக அமையும். இப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுமே தோல்வியை நோக்கியதாகவே இருப்பதால் அறிவாலயம் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!