திமுக என்ன ஸ்டாலின் குடும்ப சொத்தா? பொறுமை இழந்த மு.க.அழகிரி..!

By Selva KathirFirst Published Feb 11, 2021, 11:56 AM IST
Highlights

இணைப்பு பேச்சுவார்த்தையில் மு.க.ஸ்டாலின் இறங்கி வர மறுப்பதால் தூது வந்த குடும்ப உறவினர்களிடம் பொறுமை இழந்து மு.க.அழகிரி டென்சன் ஆகியுள்ளார்.

இணைப்பு பேச்சுவார்த்தையில் மு.க.ஸ்டாலின் இறங்கி வர மறுப்பதால் தூது வந்த குடும்ப உறவினர்களிடம் பொறுமை இழந்து மு.க.அழகிரி டென்சன் ஆகியுள்ளார்.

தனிக்கட்சி துவக்கம், பாஜகவில் இணையும் தகவல் என மு.க.அழகிரியை சுற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் உண்மையில் அழகிரியை பொறுத்தவரை மறுபடியும் திமுகவில் இணைந்து செயல்படும் எண்ணத்தில் தான் இருப்பதாக கூறுகிறார்கள். அதிலும் கட்சியிலும் சரி, அமையப்போகும் ஆட்சியிலும் சரி தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே சமயம் தனது மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் உயர் பொறுப்பு, பல ஆயிரம்கோடி ரூபாய் சொத்துகளை கொண்ட திமுக அறக்கட்டளையில் துரை தயாநிதியை உறுப்பினராக்க வேண்டும் என்பது தான் அவரது இலக்காக உள்ளது.

இதற்காகவே ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அழகிரி பாஜகவுடன் பேசி வருகிறார் என்றும் ஆதரவாளர்களை அழைத்து பேசினார் என்றும் சொல்கிறார்கள். எதிர்பார்த்ததை விட ஆதரவாளர்கள் மதுரையில் அதிகம் கூடிய நிலையிலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் முடிவு செய்யாமல் அழகிரி மவுனம் காத்து வருகிறார். இதற்கு காரணம் புதிய கட்சி என்பதில் எல்லாம் அழகிரிக்கு உடன்பாடு இல்லை என்பது தானாம். எப்படியாவது ஸ்டாலினை மறுபடியும் வழிக்கு கொண்டு வந்து தனது மகனுக்கு திமுகவில் பொறுப்பு வாங்கிவிடவே அவர் காய் நகர்த்தி வருகிறார்.

ஆதரவாளர்களை அழைத்து அழகிரி கூட்டம் போட்ட மறுநாளே ஸ்டாலினிடம் இருந்து அழகிரிக்கு தூது வர ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் மறுபடியும் திமுக ஆட்சி அமைவது உறுதி என்று ஸ்டாலின் மட்டும் அல்லாமல் கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் நம்புகிறது. இதனை அழகிரி கெடுத்துவிடக்கூடாது என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே தான் ஸ்டாலினுக்காக பேச செல்வி, மு.க.தமிழரசு அழகிரியை சந்தித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அழகிரி மறுபடியும் மறுபடியும் கூறுவது தனது மகனுக்கு திமுகவில் நல்ல பதவி என்பதும், திமுக அறக்கட்டளையில் மகனை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தானாம்.

ஒரு கட்டத்தில் ஸ்டாலின் இதற்கு ஓகே சொல்லி இறங்கி வந்த நிலையில் சபரீசன் தரப்பு வேண்டாம் என்று தவிர்த்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தான் முக அழகிரியின் பிறந்தநாளன்று அவரை ஸ்டாலின் சந்திக்க செய்திருந்த ஏற்பாடு ரத்தானதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அதே சமயம் ஸ்டாலின் தரப்பில் இருந்து செல்வியும், மு.க.தமிழரசுவும் தொடர்ந்து அழகிரியை சந்தித்து பேசிக் கெண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அழகிரியை மு.க.தமிழரசு சந்தித்த போது மு.க.அழகிரி பொறுமையை இழந்து டென்சன் ஆனதாக கூறுகிறார்கள்.

கலைஞருக்கு ஸ்டாலின் மட்டும் தான் மகனா, நீயும், நானும் மகன் இல்லையா, ஏன் செல்வி மகள் இல்லையா? கட்சியில் நமக்கு எல்லாம் எந்த உரிமையும் இல்லையா? என்று அழகிரி சீறியுள்ளார். அத்தோடு திமுகவும், திமுக அறக்கட்டளையும் ஸ்டாலினின் குடும்பச் சொத்தா, அதில் கலைஞர் மகன்களான, மகளான நமக்கு எல்லாம் உரிமை இல்லையா என்று டென்சன் ஆகியுள்ளார் அழகிரி. தனக்கு மட்டும் என்ன திமுகவை எதிரியாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணமா? என்றைக்குமே நான் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று தான் நானும் திமுகவிற்கு உழைத்துள்ளேன் என்றும் அழகிரி பேசியுள்ளார்.

நீங்களும் போய் ஸ்டாலினிடம் இதையே கேளுங்கள். நம் மகன்களிடம் இல்லாத அந்த ஒன்று என்ன உதயநிதியிடம் உள்ளது? அவனை எப்படி அதற்குள் கட்சிக்கு முக்கிய பதவியில் நியமிக்கலாம்? இது எல்லாம் நியாயமா? என்று அழகிரி பேசியதால் சமாதானத்தூதுவர்களாக வந்தவர்களே அழகிரி கேட்பது நியாயம் தானே என்கிற முடிவுடன் ஸ்டாலின் வீட்டுக்கதவை தட்ட உள்ளனராம்.

click me!