கொரோனாவிலிருந்து மீள்வேன் என்றாயே...வீர அபிமன்யுவை இழந்துவிட்டோம்.. அன்பழகன் மறைவால் கலங்கிய துரைமுருகன்!

By Asianet TamilFirst Published Jun 10, 2020, 3:37 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மனம் தாளாமல் அழுது என்னையும் கலங்க வைத்தார். ஆனாலும், கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இன்று கொரோனாவாலிருந்து அவரால் மீண்டு வர முடியாமல் போய்விட்டது. 

சட்டப்பேரவையில் ஜெ.அன்பழகனின் ஒவ்வொரு கேள்வியும் கிடுக்கிப்பிடியாக இருக்கும் என்று திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் உடல்நலன் பாதிக்கப்பட்டு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மறைவால், ஒவ்வொரு திமுகவினரும் கலங்கி போய் நிற்கிறார்கள். அதைவிட அவருடைய மறைவில் பங்கேற்க முடியாமல் போனதை எண்ணி திமுக நிர்வாகிகள் மிகவும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் ஜெ.அன்பழகனின் மறைவால் கலங்கிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவரைப் பற்றி பல நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.


அதில் “ஜெ.அன்பழகன் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எதற்காகவும் அஞ்சமாட்டார். சட்டப்பேரவையில்கூட அவர் பேச எழுந்தால், அவரை எப்படியும் உட்கார வைத்துவிட வேண்டும் என்பதிலேயே சபாநாயகரும், அமைச்சர்களும் குறியாக இருப்பார்கள். ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது, யாரும் எதையும் பேசக்கூடாது என்ற கண்டிப்புடன் இருந்தார். யாராவது எதையாவது பேசினால், கடுங்கோபம் கொள்வார். புஸ்..புஸ்.. என்று சீறுவார். 
ஒரு முறை சட்டப்பேரவையில் பேசும்போது சில பணிகளை தனியார்மயம் ஆக்குவது பற்றியுன் அதிலுள்ள நன்மை பற்றியும் ஆதரித்து ஜெயலலிதா பட்டியலிட்டுப் பேசினார். அப்போது  எழுந்த ஜெ.அன்பழகன், ‘காவல் துறையும் கெட்டுப் போய்விட்டது. எனவே, காவல் துறையும்  தனியார்மயமாக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு எந்த ரியாக்‌ஷனையும் வெளிப்படுத்தாத ஜெயலலிதா, அப்படியே அதை கடந்துவிட்டார். அன்பழகனின் கேள்விகள் ஒவ்வொன்றும் கிடுக்கிப்பிடியாக இருக்கும். அதற்காக அவரை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றுவார்கள். ஆனாலும், மீண்டும் வந்தாலும் அதேபோன்ற கேள்விகளைத்தான் எழுப்புவார்.
அப்படிப்பட்ட அன்பழகன் இன்று நம்மிடம் இல்லையே எனும்போது மனம் வருத்தமடைகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மனம் தாளாமல் அழுது என்னையும் கலங்க வைத்தார். ஆனாலும், கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இன்று கொரோனாவாலிருந்து அவரால் மீண்டு வர முடியாமல் போய்விட்டது. வீர அபிமன்யுவை நாங்கள் இழந்துவிட்டோம். பூவும் கொத்துமாக பூத்துக்குலுங்கிய குடும்பத்தில் அன்பழனை இழந்தது பேரிழப்பு. இன்று கொரோனாவை மனிதன் வெல்வானா அல்லது கொரோனா நம்மை வெல்லுமா என்ற நிலையில் உலகம் உள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . கட்சிப் பணி, நிவாரணப் பணிகளில் உள்ளோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று துரைமுருகன் கலங்கியப்படி தெரிவித்தார். 

click me!