தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அள்ளப்போகும் திமுக கூட்டணி... உச்சக்கட்ட பரபரப்பில் 9 மாவட்டங்கள்..!

By Asianet TamilFirst Published Oct 22, 2021, 7:53 AM IST
Highlights

ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கூட்டணி 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியினரே வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 பஞ்சாயத்து ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இவர்களை வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல், தேர்தல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பெரும்பாலான தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி 90 சதவீதத்துக்கும் அதிகமான தலைவர், துணைத்தலைவர் பதவிகளை திமுக வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

click me!