
ஆளும் திமுக அரசு பதவியேற்ற 3 மாதத்திலேயே ஊழல், கலெக்ஷன் மற்றும் பழிவாங்குதல் என்ற குறிக்கோளுடன் ஆளும் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, நேற்று (28.10.2021) மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான சீ. சரவணன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதம்தான்.
சரவணன் 1.3.2021 முதல் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும்; குத்தாலம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுக-வினர் பதவி வகிப்பதாகவும் கூறியுள்ளார். குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஆளும் திமுக-வினர் முறைகேடாக அஜெண்டாவில் இல்லாத பொருட்களை தீர்மானத்தில் இயற்றி, டெண்டர் வைத்து தரச் சொல்வதாகவும்; உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து எடுக்கக்கூடாது என்று விதி உள்ளதாகக் கூறியும், விதியை மீறி உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு தீர்மானத்தை இயற்றி டெண்டர் விட ஒன்றியக் குழுத் தலைவர் வற்புறுத்துவதாகவும்
தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக-வின் குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவர் இதுபோல் 16 வேலைகளை எழுதிக்கொடுத்து, இதில் 8 வேலைகள் செய்து முடித்துவிட்டதாகவும், மேலும் இவை அனைத்தையும் பொது நிதியில் டெண்டர் வைக்கச் சொல்வதாகவும், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு அஜந்தா அளிக்கப்படாமல் தீர்மானம் இயற்றினால் செல்லாது என்ற விபரத்தினை எடுத்துச் சொல்லியும், நான் சேர்மென், எனவே, நான் சொல்லியபடி செய்து தாருங்கள் என்று கட்டாயப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, திமுக ஒன்றியக் குழுத் தலைவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிர்வாக அனுமதியினை ஊராட்சியின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும்; அதையும், வேலை துவங்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்றும் தனது கடிதத்தில் அச்சத்துடன் தெரிவித்துள்ளார். எனவே, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக, தொடர்ந்து பணியாற்ற தன்னால் இயலவில்லை என்றும்; தனக்கு 60 நாட்கள் ஈட்டா விடுப்பு வழங்கக் கோரியும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் பரபரப்பாக தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் அக்கடிதத்தில், குத்தாலம் வட்டாரத்தில் தொடர்ந்து பணியாற்றினால் இயற்கையாகவோ, செயற்கையாகவோ மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சரவணன் அவர்கள் மன அழுத்தத்துடன் தனது கடிதத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சரவணன் வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால், இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் பலபேர் மன அழுத்தத்துடனும், அச்சத்துடனும் பணிபுரிந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தான், தமிழக மக்களின் பொது எதிரி திமுக என்று ஜெயலலிதா எப்போதும் கூறுவார்.
ஆளும் திமுக அரசு பதவியேற்ற 3 மாதத்திலேயே ஊழல், கலெக்ஷன் மற்றும் பழிவாங்குதல் என்ற குறிக்கோளுடன் ஆளும் திமுக-வினர், அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 19.8.2021 அன்று ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தோம். அதன் பின்னராவது திமுக-அரசின் அராஜகப் போக்கு குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது மேலும் பெருகி, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக-வினர் பதவிக்காக அரசு அதிகாரிகளை மிரட்டியும், காவல் துறையினரின் உதவியுடனும் நடத்திய ஜனநாயகப் படுகொலையை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே மீண்டும், 20.10.2021 அன்று தமிழக ஆளுநரிடம் அதிமுக சார்பில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக-வினர் நடத்திய ஜனநாயகப் படுகொலையை ஆதாரங்களுடன் விளக்கியும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் நேரில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இனியாவது திமுக-வினர் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.