தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா
அரசியல் என்றால் இதெல்லாம் சகஜம்ப்பா என நடிகர் கவுண்டமனி ஒரு படத்தில் கூறுவார். அப்படித்தான் உள்ளது அரசியல், இது தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல இந்திய அளவில் பல மாநிலங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது. மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரித்து அமைச்சரவையில் கூடவே இருந்து அமைச்சர் எம்எல்ஏக்களுடன் பாஜக சென்றதும், பீகாரில் ஓவைசி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததும் பரபரப்பு ஏற்பட்டுவரும் நிலையில், தமிழகத்திலோ யார் ஒற்றை தலைமை என்கிற விவாதம் கடந்த 20 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த ஆதரவாளர்கள் திடீர்,தீடீர் என இபிஎஸ் அணிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு இருந்தவர்கள் இன்று ஒவ்வொரு கட்சியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ்க்கு போட்டியாக இருந்த தங்க தமிழ் செல்வன்
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்தவர் தங்கதமிழ்செல்வன், இந்த இரண்டு பேருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அணிக்கு சென்ற தங்க தமிழ் செல்வன் அவரது வலது கரமாக செயல்பட்டார். திடீரென அவர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுகவிலும் ஆரம்ப கட்டத்தில் மிகப்பெரிய அளவில் மரியாதை கொடுக்கப்பட்டது. தினந்தோறும் தொலைக்காட்சிகளில் திமுக சார்பான கருத்துகளை கூறி வந்தார். இதனையடுத்து தேனி மாவட்ட பிரித்து ஒரு பகுதிக்கு மாவட்ட பொருப்பாளராக தங்க தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டார். இப்படி திமுகவின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவருக்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியது. தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகப்பெரிய போட்டியாக இருந்த தங்க தமிழ்செல்வன் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து ராஜ்யசபா பதவி தங்க தமிழ் செல்வனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் மறுக்கப்பட்டது.
கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
அதிமுகவிற்கு தாவ திட்டம்..?
திமுகவில் வேறு ஏதாவது பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், இதுவரை கிடைக்கவில்லை. மாவட்ட செயலாளர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தார்.ஆனால் தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக மட்டுமே நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இருவரும் தங்க தமிழ் செல்வனை மதிப்பதே இல்லையென கூறப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இவரின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதில்லையென்றும் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலின் போது தேனி நகராட்சி தலைவர் மற்றும் போடி பெரியகுளம் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளை திமுக தலைவரின் உத்தரவை மீறி கூட்டணி கட்சியினருக்கு விட்டுக்கொடுக்காமல் தனது ஆதரவு திமுகவினரையே போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்ததால் தலைமை இவர் மேல் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்க தமிழ் செல்வன் ஊடகங்களில் பேட்டியளிக்க கட்சித்தலைமை தடை விதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தற்போது இவரது அரசியல் எதிரியான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால், இவர் எடப்பாடி அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவில் இணைந்து மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளராக வலம் வருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதே போல அதிமுக எம்.பி.தர்மர் எடப்பாடி அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு வெகு விரைவில் பதில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்