கோவையில் புது ரூட்டெடுக்கும் திமுக… மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!

By Narendran SFirst Published Sep 21, 2022, 12:10 AM IST
Highlights

கோவையில் திமுக பெரும் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.

கோவையில் திமுக பெரும் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது. திமுக தலைமை உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கீழ்மட்ட அளவிலான கிளை, பேரூர் கழக, மாநகர வட்ட கழக தேர்தல்கள் மற்றும் ஒன்றிய, நகர, மாநகர பகுதிகள், மாநகர கழகங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. மேலும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மாவட்ட வாரியாக வரும் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனிடையே சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பதவிக்கு புதியவர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சுப்பு லட்சுமி: அரசியலில் இருந்து விலகுவதாகதான் கூறியுள்ளார், பாஜகவில் சேரப்போவதாக கூறவில்லையே, டிகேஎஸ்

இந்த நிலையில் கோவை திமுகவில் பெரிய மாற்றம் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கோவை வடக்கு, கிழக்கு, மாநகர் கிழக்கு, மேற்கு, தெற்கு என ஐந்தாக உள்ளதை மூன்றாக ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என அமைப்பு ரீதியாக மூன்று மாவட்டங்கள் மட்டுமே திமுகவில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறவுள்ளன. கோவை வடக்கில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவினாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், கோவை தெற்கில் சூலூர், கிணத்துகடவு, வால்பாறை (தனி), பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளும் இடம்பெறவுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் தற்போதைய மாவட்ட செயலாளர்களை தவிர்த்து விட்டு புதியவர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநகர் மாவட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மாவட்டத்திற்கு மகேந்திரன், சபரி கார்த்திகேயன் ஆகியோருக்கும், வடக்கு தொகுதியில் டி.ஆர்.எஸ், தொண்டாமுத்தூர் ரவி ஆகியோருக்கும் வாய்ப்பிருப்பதாகவும் திமுக மூத்த தலைவரான பொங்கலூர் பழனிசாமி தரப்பிற்கும் மாவட்ட செயலாளர் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்.. இதுதான் சமூக நீதியா ? திமுகவை வெளுத்து வாங்கிய சீமான் !

இதனிடையே மாவட்ட செயலாளர் பதவியில் அருந்ததியர் மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அருந்ததியர்கள் அதிகமாக வசிக்கும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட தனி வார்டுகளில் ஒரு அருந்ததியருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள் மன வருத்தத்தில் இருப்பதாகவும் அருந்ததியர் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை கோவை மாவட்ட திமுக மறுத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அருந்ததியர் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் திமுகவின் இந்த சூழலை பயன்படுத்தி அருந்ததியரின் வாக்கு வங்கிகளை கைப்பற்ற அருந்ததியர் கூட்டமைப்புகளை எல்.முருகன் நேரில் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!