மிசாவையே பார்த்தாச்சு இந்த வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜிபி... சரவெடியாக வெடித்த மு.க.ஸ்டாலின்..! |

By vinoth kumarFirst Published Jan 30, 2020, 3:48 PM IST
Highlights

சகோதரர் திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். அதற்குப் பிறகு பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அதை வலியுறுத்தி குறிப்பிட்டுச் சொன்னார்கள். நேரு பேசும்போது சொன்னார. இப்படித்தான் புதுக்கோட்டையில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார்.

இரண்டு வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம். மிசாவையே கண்டவர்கள் நாங்கள் இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய இணையமைச்சரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின்;- உள்ளாட்சி தேர்தலில் விழிப்புடன் இருந்ததால் தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றோம். இத்தேர்தலில் முறையாக வெற்றி அறிவித்திருந்தால் திமுக கிட்டத்தட்ட 90 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும். இதற்காகத்தான் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தையும் நாடினோம். இல்லாவிட்டால் இந்த வெற்றி கூட கிடைத்திருக்காது.

 

இங்கு சகோதரர் திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். அதற்குப் பிறகு பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அதை வலியுறுத்தி குறிப்பிட்டுச் சொன்னார்கள். நேரு பேசும்போது சொன்னார. இப்படித்தான் புதுக்கோட்டையில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார்.இன்று திவாகர் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார். எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அவர் பேசும் போது, 'கட்சி பாகுபாடின்றி, அதிமுக, திமுக என்று பாராமல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற தமிழன் என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும்' என்று குறிப்பிட்டார். அதைத்தான் நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தற்போது ஓர் ஆட்சி நடைபெறுகிறது. அதை ஆட்சி என்று சொல்வதை விட காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதை மாற்றுவதற்கான தேர்தலை விரைவில் நாம் சந்திக்க இருக்கிறோம். 

2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். திமுக பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.  என் மீது வழக்கு போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் 'நீட்' தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டோம். எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அது என்னவாயிற்று என இதுவரை இந்த அரசு கேட்டிருக்கிறதா? இல்லை. 'நீட்' தேர்வே தமிழகத்திற்குள் வராது என சட்டமன்றத்தில் சொன்னார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் தடுத்து நிறுத்தினார்களா? என்றால் இல்லை.

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2 நாட்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!